சென்னை: உலகின் முதல் இரண்டு டிரில்லியனர்களாக எலான் மஸ்க் மற்றும் கௌதம் அதானி ஆகியோர் உயர்வார்கள் என ஒரு ஆய்வு அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. Informa Connect Academy என்று அமைப்பு 2024 டிரில்லியன் டாலர் கிளப் (Trillion Dollar Club) என்ற தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் 2027 ஆம் ஆண்டு உலகின் முதல் டிரில்லியனராக உயர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பிரபலமான தொழில் முனைவோராகவும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். இவரது சொத்து மதிப்பு ஆண்டுதோறும் 110 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2027 ஆம் ஆண்டு உலகின் முதல் டிரில்லியனராக உயர்வார் என இந்த அறிக்கை கூறுகிறது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி, ஒரு டிரில்லியன் என்பது லட்சம் கோடி ஆகும்.

ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எலான் மஸ்க் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 251 பில்லியன் டாலர்கள் ஆகும். 1 டிரில்லியன் என்றால் 1 லட்சம் கோடி, இது டாலர் மதிப்பில் மாற்றினால் 84 லட்சம் கோடி ரூபாய்.
அடுத்ததாக இந்தியாவை சேர்ந்த கௌதம் அதானி 2028 ஆம் ஆண்டு டிரில்லினியர் அந்தஸ்தை அடைவார் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அவரைத் தொடர்ந்து என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சென் ஹூவாங், இந்தோனேசியாவை சேர்ந்த தொழிலதிபரான பிராஜோகோ ஆகிய இருவரும் இதே காலகட்டத்தில் டிரில்லியனராக உயர்வார்கள் என இந்த அறிக்கை கூறுகிறது.
தற்போது கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 84 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. அதானி குழுமத்தை பொறுத்தவரை தற்போது மின்சார உற்பத்தி, பகிர்வு மற்றும் வினியோகம் ஆகியவற்றிலும், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழில் பூங்காக்கள், பாதுகாப்புத்துறை, நீர் மேலாண்மை, ரயில் போக்குவரத்து, டேட்டா மையங்கள் விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என பல்வேறு துறைகளில் தொழில் செய்து வருகிறது. அதானியின் தலைமையின் கீழ் அதானி குழுமத்தை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் பல பில்லியன் டாலர்களுக்கு சந்தை மூலதன மதிப்புகளை கொண்டுள்ளன.
அதானியின் சொத்துமதிப்பு ஆண்டுதோறும் 122.86 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போதுள்ள 30 பில்லினியர்கள் 2050க்குள் டிரில்லியனியர்களாக மாறுவார்கள் என இந்த அறிக்கை கணித்துள்ளது. இந்த பட்டியலில் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 2033க்குள் டிரில்லியனர் அந்தஸ்தை பெறுவார்கள் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications