ட்விட்டர் நிறுவனத்தினை வாங்கிய கையோடு அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதாக அறிவிப்புகள் வெளியானதில் இருந்தே, ஒவ்வொரு அதிரடியான அறிவிப்பாக வெளி வந்த வண்ணம் உள்ளது.
எந்த நேரத்தில் என்ன அறிவிப்பு வருமோ என்ற கவலையை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
75% பணி நீக்கமா?
குறிப்பாக பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து ஊழியர்கள் பதற்றத்திலேயே உள்ளனர் எனலாம். ஏனெனில் ஏற்கனவே ட்விட்டர் ஊழியர்கள் தொகுப்பில் 75% பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், அதனை ட்விட்டர் நிர்வாகம் மறுத்திருந்தது.
லிஸ்ட் போடுங்க
ஆனால் போகிற போக்கை பார்த்தால் அது உண்மை தானோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் வாங்கிய முதல் நாளே முக்கிய அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்கும் படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விரைவில் பணி நீக்கம் இருக்கலாம்
மேலும் நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின் படி, ட்விட்டர் ஊழியர்கள் பலரும் விரைவில் பணி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் ட்விட்டரின் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டடுள்ளதாகவும், குழுவின் எண்ணிக்கையை குறைக்க கூறியுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
எப்போதிலிருந்து பணி நீக்கம்
ஆக எப்போது தங்களது வேலை பறிபோகுமோ என்ற பதற்றமே ட்விட்டர் ஊழியர்களை தொற்றிக் கொண்டுள்ளது எனலாம். தகவல்கள் படி இந்த பணி நீக்க நடவடிக்கையானது நவம்பர் 1ல் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடாக பங்குகள் கொடுக்கப்படலாம் என்றும், சிலருக்கு பணமாக கொடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
வருவாயினை அதிகரிக்க திட்டம்
ட்விட்டரின் புதிய முதலாளி ஏற்கனவே நிறுவனம் குறித்த மதிப்பீடுகளை செய்துள்ளதாகவும், வருவாயினை அதிகரிக்க புதிய திட்டங்களை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ட்விட்டரின் வருவாயினை இருமடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சியினை எடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கடன் பெற்று வாங்கிய நிறுவனம்
ட்விட்டரை வாங்க தனது பங்குகளை அடகு வைத்தும், வங்கிகளில் கடன் பெற்றும் ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதன் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஆச்சரியம் இல்லை என்றே கூறலாம்.
மந்த நிலைக்கு மத்தியில் அவசியம் தான்
மேலும் உலகமே மந்த நிலைக்கு மத்தியில் சவால்களை எதிர்க்கொண்டுள்ளது. இந்த நிலையில் பல டெக் ஜாம்பவான்களும் பல மறுசீரமப்பு திட்டங்களை கையில் எடுத்துள்ளன, குறிப்பாக செலவு குறைப்பின் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு, புதிய பணியமர்த்தல் நிறுத்தம் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் 44 பில்லியன் டாலர் தொகையில் வாங்கிய ட்விட்டரில் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்பார்த்தது தான் என ஒரு தரப்பு கூறுகின்றது.
எத்தனை பேர் பணி நீக்கம்
ட்விட்டரில் தற்போது மொத்தம் 7500 ஊழியர்களுக்கு மேல் பணியாற்றி வரும் நிலையில், அதன் எண்ணிக்கையை 2000 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. எனினும் இது குறித்த எந்த விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications