டெக்சாஸ்: இப்போது இந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான நபர் என்றால் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் தான் என்று கூறலாம்.
ஏனெனில் பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு அவருக்கு 44.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 3.7 லட்சம் கோடி ரூபாயை மொத்த ஊதியமாக வழங்குவதற்கு டெஸ்லா நிறுவன பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

டெஸ்லா நிறுவனத்தை உருவாக்கி அதனை உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக மாற்றிய பெருமை எலான் மஸ்கிற்கு உண்டு.
ஆனால் அதற்காக அவர் கேட்கும் தொகை பெரியது. அதாவது தனக்கு மிகப்பெரிய தொகையை ஊதியமாக வழங்க வேண்டும் என மஸ்க் பல ஆண்டுகளாக கோரி வருகிறார். ஆனால் பிற பங்குதாரர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நீதிமன்றத்தில் கூட வழக்கும் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த வாரம் டெக்சாஸில் நடைபெற்ற டெஸ்லா பங்குதாரர்கள் கூட்டத்தில் மொத்த ஊதிய தொகுப்பு குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 3.7 லட்சம் கோடி ரூபாய் ஊதியமாக வழங்கலாம் என பெரும்பாலானவர்கள் சாதகமாக வாக்களித்தனர்.
இந்த தகவல் கிடைத்தவுடன் நடனமாடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எலான் மஸ்க். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் தன்னுடைய நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார் இதனை அவர் உற்சாகத்துடன் கொண்டாடும் வீடியோ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய ஊதிய தொகுப்புக்கு பங்குதாரர்கள் அனுமதி தந்துவிட்டாலும், பல்வேறு சட்ட சிக்கல்கள் இருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே இது தொடர்பாக டெலவேர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, பெரிய தொகையை ஊதியமாக வழங்குவதா? முடியாது, இது பங்குதாரர்களுக்கு பெரிய சுமையை கூட்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நிறுவனத்தில் கணிசமான பங்குகளை கொண்டிருக்கும் நார்வே எண்ணெய் நிதியம் இந்த அளவு ஊதியம் வழங்குவது நியாயமற்றது என கூறி தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கூடிய விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படலாம் என தெரிகிறது. தொழிலாளர் நலனை கவனத்தில் கொள்ளாமல் உரிமையாளரின் நலனை மட்டும் கவனத்தில் கொள்வதா என இந்த நிதியம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
தற்போது டெஸ்லா நிறுவனத்தில் 25 சதவீத பங்குகளை தன்வசம் கொண்டு வருவதற்கான பணிகளில் எலான் மஸ்க் தீவிரமாக இறங்கியுள்ளார். ஏனெனில் அவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இத்துடன் இணைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பங்குதாரர்களால் இதற்கு எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதற்காக 25% பங்குகளை தன்வசம் கொண்டு வருவதற்கான பணிகளை மும்முரப்படுத்தியுள்ளார்.
சர்வதேச அளவில் டெஸ்லாவின் விற்பனை மந்த நிலையில் இருக்கிறது, மின்சார வாகனங்களை வாங்கும் போக்கு குறைந்தது மற்றும் சீனாவின் பிஒய்டி நிறுவனம் போட்டியில் முந்துவது ஆகியவற்றை இதற்கு காரணமாக கூறலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications