டெக் துறையில் AI எழுச்சி வியப்பு அடையும் அளவுக்கு வளர்ச்சி அடைந்து வந்தாலும், இது அனைவரும் பயன்படுத்தும் சேவையாக இல்லை என்பது முக்கிய வாதமாக உள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் சேவைகளில் AI பயன்பாடுகள் புகுத்தப்பட்டு வருகிறது.
இதனால் பல நன்மைகள் இருந்தாலும், சில பிரச்சனைகளும் வருகிறது. சமீபத்தில் கூகுள் ஜெமினி சேவையில் இமேஜ் ஜெனரேட்டர் சேவையில் உருவான பிரச்சனைக்கு கூகுள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது.

இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி எலான் மஸ்க் X தளத்தில் இருக்கும் GROK பயன்படுத்த வலியுறுத்தியுள்ளார். இதோடு நிற்காமல் அடுத்த குண்டை போட்டு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தூக்கத்தைக் கெடுத்துள்ளார்.
XMAIL சேவை: எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம் (டுவிட்டர்), எக்ஸ்மெயில் (XMAIL) என்ற புதிய மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருப்பது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கூகுளின் நீண்ட கால ஆதிக்கம் செலுத்தி வரும் ஜிமெயில்-க்கு (Gmail) போட்டியாக வரவுள்ளதா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
புயலைக் கிளப்பியது: எலான் மஸ்க்கின் எக்ஸ்மெயில் அறிவிப்பு, தொழில்நுட்ப உலகில் உண்மையிலேயே புயலைக் கிளப்பியுள்ளது. எக்ஸ்மெயில் அறிவிப்புக்குச் சற்று முன்னதாக, ஜிமெயில் நிறுத்தப்படவுள்ளது என்ற வதந்திகள் இணையத்தில் பரவத் தொடங்கின.
வதந்திகளின் பின்னணி: ஜிமெயில் நிறுத்தப்படவுள்ளது போன்ற செய்திகள் வெறும் வதந்திகள் மட்டுமே, இது கூகுளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் பதற்றம் சில மணிநேரத்திலேயே அடங்கியது. இருப்பினும், ஜிமெயில் பயன்படுத்துவோருக்குக் குழப்பத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தின.
எக்ஸ்மெயில் வருகை: Gmail மூடல் என்ற செய்திக்கு மத்தியில், எக்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு பொறியியல் குழுவின் மூத்த உறுப்பினர் நாதன் மெக்ராடி, எக்ஸ்மெயில் அறிமுகம் எப்போது என்று டுவிட்டரில் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், அந்தச் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று உறுதிப்படுத்தினார். இதனால், மின்னஞ்சல் சேவையில் ஒரு புதிய போட்டித் தளம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஜிமெயில் தொடரும்: இதற்கிடையில், ஜிமெயில் நிறுத்தப்படுவதாகப் பரவி வரும் வதந்திகளை மறுத்து, ஜிமெயில் சேவை தொடரும் என்று கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி 2024 இல், ஜிமெயிலின் பார்வை அமைப்பில் மேம்பாடுகள் செய்யப்பட்டதாகவும், ஆனால் சேவை நிறுத்தப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மாற்றத்திற்குத் தயாரா?: ஜிமெயில் தொடர்ந்து இயங்கினாலும், எக்ஸ்மெயிலின் வருகை, மின்னஞ்சல் சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில பயனர்கள் ஜிமெயிலை நம்பியிருக்காமல் மாற்று வழிகளைத் தேடத் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர்.
எக்ஸ்மெயில் எப்படி இருக்கும், ஜிமெயிலுடன் எப்படிப் போட்டியிடும் என்பது இன்னும் தெளிவில்லை. ஆனால், இந்த அறிவிப்பு, மின்னஞ்சல் சேவையில் புதிய சாத்தியங்களைத் திறந்துவிட்டுள்ளது என்பது மட்டும் உண்மை, இதேபோல் கூகுள் சேவைகளின் ஆதிக்கம் இனி அனைத்து பிரிவிலும் படிப்படியாகக் குறையும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications