சர்வதேச டெக் துறையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் வேளையில், கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்-க்கும், டெஸ்லா மற்றும் எக்ஸ் நிறுவனரான எலான் மஸ்க்கிற்கும் மத்தியிலான மோதல் மீண்டும் வெடித்துள்ளது.
எக்ஸ் தளத்தில் உருவான ஒரு விவாதம் தற்போது எலான் மஸ்க்-ஐ கார், ராக்கெட், இண்டர்நெட், சோஷியல் மீடியா, ஏஐ-க்கு அடுத்தப்படியாக, அமேசானுக்கு போட்டியாக ஒரு ஈகாமர்ஸ் தளத்தை உருவாக்கும் யோசனைக்குத் தள்ளியுள்ளது. என்ன நடந்தது..? எலான் மஸ்க் ஏன் இந்த முடிவை எடுத்தார்..?

எக்ஸ் தளம் உருவாக்கிய Grok bot வாயிலாக அமேசான் தளத்தில் ஆர்டர் செய்ய அமேசான் நிறுவனம் தடுத்து வருவதாக ஒரு நபர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இந்த பதிவில் தன்னுடைய ஏஐ ஏஜெண்ட்டான Grok bot அமேசான் ஆர்டர்களை நிர்வாகம் செய்யும் பணிகளை செய்ய உருவாக்கியதாகவும், ஆனால் அமேசான் தளம் இந்த ஏஐ பாட் மூலம் ஆர்டர்களையும், கோரிக்கைகளையும் ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனால் அமேசான் வாடிக்கையாளர்கள் இனி ஏஐ பாட் மூலம் ஆர்டர் செய்ய வேண்டுமாயின், அமேசான் தவிர்த்து வேறு தளத்திற்கு செல்ல வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
பின்னர் அதே நபர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, எலான் மஸ்க் பேசாம நீங்க ஏன X Shop என்ற ஆன்லைன் ஷாப்பிங் தளத்தை உருவாக்க கூடாது, இதன் மூலம் ஏஐ ஏஜெண்ட் மூலம் ஷாப்பிங் செய்யும் வசதியை மக்களுக்கு நீங்கள் அளிக்கலாம் என தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், அமேசான்-க்கு போட்டியாக நாமும் ஒரு தளத்தை உருவாக்கலாம் என தெரிவித்தார்.
ஆனால் இத்தளம் எப்படியிருக்கும், எப்போது வரும் என எவ்விதமான விபரத்தையும் கொடுக்கவில்லை. சமீப காலமாக உலகில் இருக்கும் அனைத்து ஈகாமர்ஸ் தளமும் ஏஐ அசிஸ்டென்ட் சேவை மூலம் மக்களுக்கு ஷாப்பிங் செய்வதை அனுமதிக்க வேண்டுமா என தீவிரமாக விவாதித்து வரும் வேளையில் தற்போது அமேசானுக்கு போட்டியாக எலான் மஸ்க் புதிய ஈகாமர்ஸ் தளம் உருவாக்கும் சர்ச்சை வெடித்துள்ளது.
இதனால் விரைவில் இதற்கான முடிவுகளை ஈகாமர்ஸ் நிறுவனங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் third-party AI agents மூலம் ஷாப்பிங் செய்வதை மொத்தமாகத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

