ரஷ்ய அதிபர் புதினுக்கும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் அமெரிக்க தொழிலதிபருமான எலான் மஸ்குக்கும் இடையே தகவல் தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருப்பது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி இருக்கும் சூழலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பாக கமலா ஹாரிஸும் போட்டி களத்தில் இருக்கின்றனர். இவர்களில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழலில் எலான் மஸ்க்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டிலிருந்து எலான் மஸ்க், ரஷ்ய அதிபர் புதினோடு பேசி வருகிறார் என தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிலிருந்து மஸ்க், ரஷ்ய அதிபர் புதினுடன் நேரடியாக பேசி வருவதாக பென்டகன் அதிகாரிகளிடம் அவரே தெரிவித்ததாக இந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது. தொலைபேசி வாயிலான இந்த அழைப்பின் போது எலான் மஸ்க் மற்றும் புதின் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், சர்வதேச அளவிலான பிரச்சனைகள் தொடங்கி தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் என நிறைய விஷயங்கள் பற்றி பேசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு கலந்துரையாடலில் புதின் தைவான் மீது ஸ்டார்லிங்க் சேட்டிலைட்டுகளை ஆக்டிவேட் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் சீன அதிபர் ஸீஜின்பிங்குக்கு சாதகமாக இவ்வாறு ஒரு கோரிக்கையை புதின் முன்வைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர் போட்டியில் இருக்கக்கூடிய டொனால்ட் ட்ரம்புக்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையே மறைமுகமான தொடர்பு இருப்பதாக அமெரிக்காவில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் ட்ரம்ப் இதனை மறுத்து வருகிறார்.
இந்த சூழலில் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்படக்கூடிய எலான் மஸ்குக்கும் புதினுடன் தொடர்பு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி அமெரிக்க தேர்தல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக எலான் மஸ்கின் நிறுவனம் தங்களுடைய ஸ்டார்லிங்க் டெர்மினல்களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்ததாக ஒரு சர்ச்சைக்குரிய செய்தி வெளியானது. ஆனால் எலான் மஸ்க் அதனை மறுத்தார்.
மேலும் இது போலியான தகவல் என கூறினார். அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கக்கூடிய டொனால்ட் ட்ரம்ப் தான் பதவிக்கு வந்தால் எலான் மஸ்குக்கு தன்னுடைய அதிகாரத்தில் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் தான் இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக 2022 ஆம் ஆண்டில் தான் ஒரு முறை புதினிடம் பேசி இருப்பதாகவும் அதுவும் விண்வெளி தொழில்நுட்பங்கள் பற்றிய கலந்துரையாடலாக இருந்தது என்றும் 18 மாதங்களுக்கு முன்பு இது நடந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications