ஒரு காலத்தில் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அடைவதே குதிரை கொம்பாக இருந்த நிலை தற்போது தலைகீழாக மாறி உலகின் முதல் டிரில்லியனர் அந்தஸ்தை பெறப்போவது யார் என்ற கேள்விக்கு விடை தேடும் நிலைக்கு நாம் வந்துள்ளோம். உலக பணக்காரர்கள் பட்டியலை பார்க்கும் போது டாப் 10 இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் 100-250 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை மட்டுமே பெற்று இருக்கும் வேளையில் ஒருவரின் சொத்து மதிப்பு மட்டும் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது.
ஆம், எலான் மஸ்க் உலகில் முதல் முறையாக 700 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வைத்துள்ள பெரும் பணக்காரராக உயர்ந்துள்ளார். ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர் பட்டியலின்படி எலான் மஸ்க் சுமார் 748 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் இவரின் சொத்துமதிப்பு பெரிய அளவில் உயர்ந்தாலும், கடைசி 30 நாளில் இவரின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் 1 வழக்கு.
டெஸ்லா நிறுவனம் 2018இல் அளிக்கப்பட்ட 56 பில்லியன் டாலர் ஊதிய தொகுப்பை டெலவேர் உச்ச நீதிமன்றம் 2 வருட போராட்டத்திற்கு பின்பு மீண்டும் அங்கீகரித்ததுள்ளது. இதன் மூலம் 139 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகள் எலான் மஸ்கிற்கு சொந்தமாகியுள்ளது.
இதனால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு பெரிதும் உயர்ந்தது. இதோடு கடந்த ஒரு மாதமாக எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஐபிஓ மூலம் பட்டியலிட வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகி வரும் வேளையில் 600 சொத்து மதிப்பு தற்போது 748 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மஸ்கின் சொத்து மதிப்பு
ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி மஸ்கின் மதிப்பு 749 பில்லியன் டாலர், ஆனால் அவர் சம்பளம் என பார்த்தால் 1 டாலர் கூட இல்லை என்பது தான் அச்சரியம். இவருடைய சொத்து மதிப்பு அனைத்தும் இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ்ஏஐ, நியூராலிங்க், தி போரிங் கம்பெனி உள்ளிட்ட ஏழு நிறுவன பங்குகள் மூலம் மதிப்பிடப்படுகிறது.
எலான் மஸ்க் டெஸ்லாவில் 12 சதவீதம், ஸ்பேஸ்எக்ஸில் 42 சதவீதம், எக்ஸ்ஏஐயில் 33 சதவீதம் பங்குகளை வைத்துள்ளார்.

உலக பணக்காரர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்-கிற்கு பின்னால் இருக்கும் மூன்று பில்லியனர்களை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக உள்ளார். கூகுள் லாரி பேஜ் 252.6 பில்லியன் டாலர், ஓராக்கிள் லாரி எலிசன் 242.7 பில்லியன் டாலர், அமேசான் ஜெஃப் பெசோஸ் 239.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.
இதை தாண்டி டெஸ்லா உயர்மட்ட நிர்வாக குழு எலான் மஸ்க்கிற்கு அடுத்த 10 வருடத்தில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை கொடுப்பதாக ஊதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உலகின் முதல் டிரில்லியனர் யார் என்ற கேள்விக்கு பதில் எலான் மஸ்க் தான். ஆனால் இந்த இலக்கை ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ வெளியிட்டாலே நடக்கும் என்ற கணிப்பும் உள்ளது.


Click it and Unblock the Notifications