சர்வதேச அளவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி செயலிகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எனவே எலான் மஸ்க் இந்த தளங்களுக்கு போட்டியாக ஒரு செயலியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஓடிடி செயலி நெட்பிளிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு கடும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலான் மஸ்க் இந்த ஓடிடி செயலிக்கு எக்ஸ் டிவி என பெயர் சூட்டியிருப்பதாக தெரிகிறது. இந்த புதிய செயலி அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களை போலவே செயல்படும் என தெரிகிறது. பயனாளர்கள் எக்ஸ் தளத்தின் வாயிலாக இந்த செயலியை அணுக முடியும் . மற்ற ஓடிடி தளங்களில் இருப்பதைப் போலவே இதில் படங்கள், ஆவண படங்கள் , டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவற்றை காண முடியும்.

முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு டிவியின் பீட்டா வெர்ஷனில் எக்ஸ் டிவி செயலி ஆனது வெளியிடப்பட்டிருப்பதாக எலான் மஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பீட்டா வெர்ஷன் தற்போது எல்ஜி டிவி, அமேசான் ஃபயர் டிவி மற்றும் கூகுள் டிவி ஆகிய கருவிகளில் கிடைக்கிறது. அதிகாரப்பூர்வமாக இந்த செயலியை அறிமுகம் செய்வதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சில குறிப்பிட்ட கருவிகளில் பதிவிறக்கம் செய்யும் வகையில் இது வந்திருப்பதாக பயனாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிகழ்ச்சிகளை நேரலையாக பார்க்கும் வசதி இதில் இருக்கிறது. செய்திகள், விளையாட்டு, இசை நிகழ்ச்சி மற்றும் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும் என்பதோடு அவற்றை ரீப்ளே செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. அதாவது பயனாளர்கள் அவர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை ஸ்டோரேஜ் செய்து கொண்டு 72 மணி நேரங்களுக்குள் மீண்டும் அதனை காண முடியும்.
அதே போல இந்த செயலியில் ஸ்டார்ட் ஓவர் டிவி என்ற ஒரு சேவையும் இருக்கிறது. எந்த ஒரு நிகழ்ச்சி அல்லது திரைப்படத்தின் தொடக்கத்தையும் பயனாளர்கள் மிஸ் செய்யாமல் பார்ப்பதற்கு இந்த புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளதாம்.
இதில் இலவசமாக டிவிஆர் ரெக்கார்டிங் வசதியும் இருக்கிறதாம். அதாவது 100 மணி நேரங்கள் வரையிலான காட்சிகளை நாம் ரெக்கார்ட் செய்து கொள்ள முடியும் . எக்ஸ் டிவி செயலியை பயன்படுத்த விரும்புபவர்கள் எக்ஸ் தள பக்கத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் எக்ஸ் டிவி செயலியானது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளில் மட்டுமே கிடைக்கிறது. கூடிய விரைவில் இது மற்ற கருவிகளிலும் கிடைக்கும். ஆனால் எக்ஸ் டிவி செயலிக்கு சந்தா கட்டணங்கள் இருக்கிறதா என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
Story written by: Devika


Click it and Unblock the Notifications