சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சமூகவலைதளம் தான் எக்ஸ். முன்பு டிவிட்டர் என அறியப்பட்ட இந்த தளம் தற்போது எக்ஸ் என அறியப்படுகிறது. உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தான் இதன் தலைமை செயல் அதிகாரி. எக்ஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களின் குறிப்பிட்ட பகுதியினரை பணி நீக்கம் செய்துள்ளது தெரிய வந்துள்ள்து. தி வெர்ஜ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி அடிப்படையில் எக்ஸ் சமூக வலைத்தள நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. எவ்வளவு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்ற முழுமையான விவரங்கள் தெரிய வரவில்லை.
ஆனால் இது கணிசமான எண்ணிக்கை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் எக்ஸ் நிறுவன தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய ஊழியர்கள் நிறுவனத்தில் தங்களுடைய பங்களிப்பு என்ன என்பது குறித்து ஒரு பக்கத்தில் சுருக்கமாக எழுதி தங்களுடைய மேலதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்தனர்.

இவ்வாறு எக்ஸ் நிறுவனத்தில் தங்களுடைய பங்களிப்பு குறித்து சுருக்கமாக ஒரு பக்கத்திற்குள் எழுதி தரும் ஊழியர்களுக்கு அவர்களின் பங்களிப்புகள் குறித்து படித்து மதிப்பாய்வு செய்து நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட அளவிலான பங்குகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது ஊழியர்கள் பணி நீக்கம் தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது . ஒருவேளை இந்த மதிப்பாய்வின் அடிப்படையில் தான் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு போட்டியாக செயல்பட்டு வந்தது தான் டிவிட்டர். கடந்த 2022ஆம் ஆண்டு எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றினார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே எலான் மஸ்க் டிவிட்டரை தனக்கு சொந்தமாக்கினார். பின்னர் அதற்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். அவர் டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியது முதலில் இருந்து தற்போது வரை 6,000க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார். உயர் பதவிகளில் இருந்த பலரும் கூட வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எக்ஸ் பக்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வரப்போவதாக மஸ்க் கூறி வரும் நிலையில் ஊழியர்கள் பணி நீக்கமும் தொடர்கிறது.
எலான் மஸ்க் எக்ஸ் மட்டுமில்லாமல், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூரா லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளராகவும் இருக்கிறார். தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
Written by: Devika


Click it and Unblock the Notifications