இந்திய வர்த்தக சந்தையும் சரி, இந்திய மக்களும் சரி, டெஸ்லா கார் இந்தியாவுக்கு எப்போது வரும், டெஸ்லா தொழிற்சாலை எப்போது இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் அடுத்த ஒரு குட்நியூஸ் வந்துள்ளது. இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்து விட்டால் 2016ல் முகேஷ் அம்பானி ஜியோ மூலம் செய்த புரட்சி மீண்டும் இந்தியாவில் உருவாக வாய்ப்புகள் பிறந்துள்ளது.
இந்தியாவில் எலான் மஸ்க் தனது செயற்கைகோள் அடிப்படையிலான பிராட்பேன்ட் சேவை ஸ்டார்லிங்க்-ஐ இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பல வருடமாக முயற்சி செய்து வரும் வேளையில், தற்போது இதற்கான வழிபிறந்துள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது போல் இந்தியாவுக்கு டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் என இரண்டு நிறுவனமும் வர உள்ளது.

இந்தியாவில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் வருவதில் ஸ்பெக்ட்ரம், ஜியோ- ஏர்டெல் எதிர்ப்பு, அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுடனான தொடர்புகள் தொடர்பான பிரச்சினைகள் இருந்தபோதிலும், எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்கிற்கான (Starlink) சாட்காம் லைசென்ஸ் விண்ணப்பத்தை இந்திய அரசு விரைவுபடுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எலோன் மஸ்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு சில முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் விளக்கம் அடிப்படையில் இந்த சாட்காம் லைசென்ஸ்-ஐ "கண்டிஷ்னல் அப்ரூவல்" (conditional approval) மூலம் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, ஸ்டார்லிங்க் இந்தியாவில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் அல்லது உபகரணங்கள் குறித்து எந்த அமெரிக்க நிறுவனத்துடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கூடாது என்றும், மேலும் இந்திய பயனர்கள் தரவு நாட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது போன்ற முக்கியமான கட்டுப்பாடுகள் உடன் சாட்காம் லைசென்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்பட சாட்காம் நிறுவனம் கேட்கப்படலாம். இது நடந்தால் ஜியோ உடன் இணைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது, கடந்த ஒரு மாதமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எலான் மஸ்க் அலுவலகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த மாத இறுதியில் எலான் மஸ்க் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார், மேலும் இந்த பயணத்தில் டெஸ்லா தொழிற்சாலைக்கான திட்டங்கள் மற்றும் ஸ்டார்லிங்க் சேவை குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் செயற்கைகோள் வாயிலாக இண்டர்நெட் சேவைகளை வழங்குவதற்கு சாட்காம் லைசென்ஸ் தேவை. ஸ்டார்லிங்கின் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுடனான தொடர்பில் இருப்பது இந்திய அரசாங்கத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் வேளையில், இந்திய அரசாங்கம் தரவு பாதுகாப்பில் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவில் சேவை அளிக்க ஸ்டார்லிங்கிற்கு லைசென்ஸ் வழங்கப்பட்டால், இந்தியாவில் அதிவேக இணையதள சேவைகள் காடு, மலை என தொலைத்தொடர்பு சேவைகள் இல்லாத இடத்திலும் பெற முடியும். இது இந்தியாவின் தொலைதூர மற்றும் கிராமப்புற பகுதிகளில் இணையதள இணைப்பு பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்.
எலான் மஸ்க் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை அளிக்க இந்திய நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது இந்திய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் ஸ்டார்லிங்க் BSNL உடன் இணைந்து செயல்பட்டால் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் லாப நிலைக்கு மாறுவதற்காக வாய்ப்புகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா, ஸ்டார்லிங் வரும் வேளையில் டெஸ்லா கார் வாங்குவோருக்கு இலவசமாக ஸ்டார்லிங்க் சேவை என்ற வித்தியாசமான திட்டத்தைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


Click it and Unblock the Notifications