கனடா: எதிர்வரும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய்விடுவார் என டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்தது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்புக்கு மிகத் தீவிரமாக ஆதரவு அளித்தவர் தான் எலான் மஸ்க். இந்த நிலையில் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய்விடுவார் என எலான் மஸ்க் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜெர்மனி அதிபரை முட்டாள் என விமர்சனம் செய்து எலான் மஸ்க் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். ஜெர்மனியில் கூட்டணி அரசு வீழ்ச்சி அடையும் என்றும் அதில் அவர் பதிவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து ஃபின் டெக் நிறுவன அதிபர் என குறிப்பிட்டுள்ள எக்ஸ் பயனர் ஒருவர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நீக்குவதற்கு உங்கள் உதவி தேவை என எலான் மஸ்கிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், 2025 ஆம் ஆண்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ காணாமல் போய்விடுவார் என்று தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவை பொறுத்தவரை தற்போது கனடாவில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார். இந்த விவகாரம் அவருக்கு உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கூட்டணி கட்சிகளும் ஆதரவாக இல்லை.
இந்த நிலையில் எலான் மஸ்க்கும் அவர் வீட்டுக்கு செல்வார் எனக் கூறியிருப்பது தற்போது நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. 2013 ஆம் ஆண்டிலிருந்து லிபரல் கட்சியை வழிநடத்தி வரக்கூடிய ஜஸ்டின் ட்ரூடோ தொடக்கத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு பிரதமராக இருந்தார்.
ஆனால் அண்மை காலமாக அவருடைய செயல்பாடுகள் பெரும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றன எனவே வரும் தேர்தல் அவருக்கு மிகவும் சவால் நிறைந்த தேர்தலாக இருக்கும் என கணிப்புகள் சொல்கின்றன. இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கனடாவில் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் குற்றம் சாட்டினார். இதனை அடுத்து இந்தியா கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தை ஜஸ்டின் ட்ரூடோ கையாண்ட விதம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. சர்வதேச அளவிலும் பல விமர்சனங்களை ட்ரூடோ எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உள்நாட்டிலும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை சீராக இல்லை என்பதால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications