உலகப் பணக்காரரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு அதன் பெயர் எக்ஸ் என மாற்றினார். மேலும், நிறுவனத்தை மறுசீரமைத்தபோது பல்வேறு சட்ட மற்றும் நிதிச் சிக்கல்களை எலான் மஸ்க் எதிர்கொண்டார். அதில் மிக முக்கியமான ஒன்று, முன்னாள் உயர் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை தொடர்பான வழக்கு தான்.
இந்த விவகாரத்தில் தற்போது எலான் மஸ்க், அவரது நிறுவனமான எக்ஸ் கார்ப் மற்றும் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பராக் அக்ரவால் உட்பட 4 முன்னாள் நிர்வாகிகளுடன் சமரசம் செய்துகொண்டுள்ளனர். சுமார் 128 மில்லியன் டாலர் எனக் கூறப்பட்ட இழப்பீட்டுத் தொகையை நிறுத்தி வைத்ததாக அவர்கள் எலான் மஸ்க் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.

கடந்த வாரம் சான் பிரான்சிஸ்கோ ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் சமரசம் ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்கின் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான கையகப்படுத்தலை தொடர்ந்து எழுந்த மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்ட சட்டப் போராட்டங்களில் ஒன்று இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, முன்னாள் ட்விட்டர் நிர்வாகிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க எலான் மஸ்க் மறுத்ததால், இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றது. நிர்வாகிகளுடனான வேலை ஒப்பந்தங்களின்படி, நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டால், கணிசமான தொகையை இழப்பீடாகப் பெற அவர்கள் உரிமை கோரினர். ஆனால், எலான் மஸ்க் அந்த பணத்தைச் செலுத்த மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது இந்த சமரச ஒப்பந்தத்தின் படி, விதிமுறைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு செலுத்தப்படும் இறுதித் தொகை எவ்வளவு என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. வழக்கின் இறுதித் தீர்வை உறுதி செய்வதற்காக, அக்.1-ஆம் தேதி நடக்கவிருந்த வழக்கு விசாரணையையும், ஆவணங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியிருந்தார். ஆனால், அப்போதில் இருந்து மிக கடுமையான சவால்களை அவர் சந்தித்து வருகிறார். ட்விட்டரை 'எக்ஸ்' (X) என்று மறுபெயரிட்டு, அதன் பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களை பணி நீக்கம் செய்தார். இந்த அதிரடி நடவடிக்கைகள் பல ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களால் விமர்சிக்கப்பட்டதுடன், நீதிமன்றங்களில் பல வழக்குகளும் தொடரப்பட்டன.
இந்த சூழலில், முன்னாள் உயர் நிர்வாகிகளுடனான இந்த இழப்பீட்டு வழக்கில் சமரசம் ஏற்பட்டிருப்பது, எலான் மஸ்க்கிற்கு நிம்மதி அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்பட்டாலும், ட்விட்டர் கையகப்படுத்தல் தொடர்பான பிற சட்ட மற்றும் நிதிப் பிரச்சனைகளை அவர் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சமரசம், பராக் அக்ரவால் உட்பட பாதிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு ஓரளவுக்கு நீதி கிடைத்துள்ளது என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications