அமெரிக்கா: உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும் சிறந்த தொழில் முனைவோராகவும் வளர்ச்சி அடைந்திருக்கிறார் எலன் மஸ்க். எப்படியாவது இவரது நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடுமா என உலகெங்கிலும் இருப்பவர்கள் முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் எலன் மஸ்கின் நிறுவனத்தில் தற்போது புதிய வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதுவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எலன் மஸ்கிற்கு சொந்தமான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனம் தான் எக்ஸ் ஏஐ (xAI). இந்த நிறுவனம் ஏஐ டியூட்டர் (AI tutor) என்ற பெயரில் புதிதாக வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் ஏஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு ட்யூட்டராக அதாவது பயிற்சியாளராக வேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 5000 ரூபாய் வரை ஊதியம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் ஏஐ நிறுவனம் லிங்குடின் தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளது. அதில் ஏஐ டியூட்டர் வேலையை பொறுத்தவரை இதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் உயர் தரமான மற்றும் பல்வேறு பிரிவுகளில் தரவுகளை உருவாக்குபவர்களாக இருக்க வேண்டும், இவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு பயன்படுத்தக்கூடிய அல்காரிதம்களுக்கு ஏற்ற வகையில் கண்டெண்டுகளை உருவாக்கி தர வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தொழில்நுட்ப பிரிவினை சேர்ந்த ஊழியர்களோடு இணைந்து இத்தகைய டேட்டா செட்களை உருவாக்க வேண்டும். மேலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உருவாக்கும் கண்டெண்டுகளை ஆய்வு செய்து அவற்றுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
டேட்டா செட்டுகளை உருவாக்குவது, ஏஐ உருவாக்கும் தகவல்களை சரிபார்ப்பது உள்ளிட்ட வேலைகள் இதில் அடங்கும் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி உயர்தரமான தரவுகளை உருவாக்கி தரக்கூடிய நபர்களுக்கு அதிக ஊதியம் வழங்கவும் தயாராக இருக்கிறோம் என எலன் மஸ்கின் ஏஐ நிறுவனம் கூறுகிறது.
இந்த வேலையினை பொருத்தவரை ரிமோட் முறையில் அதாவது அவர்களது இருப்பிடத்திலிருந்து செய்து கொள்ள முடியும். ஆறு மாத காலத்திற்கு இந்த வேலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ப்ராஜெக்ட்களுக்கு தேவையான தரவுகளை உருவாக்கி வழங்குவது இதில் முக்கிய பணி ஆகும். ஆங்கிலத்தில் சிறந்த மொழி திறன் கொண்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் சிறந்த ஆய்வு திறன் இருக்க வேண்டும், பல்வேறு மூலங்களிலிருந்து சிறந்த தகவல்களை சேகரிக்கும் திறன் மற்றும் மிகச்சிறந்த ஆய்வு மதிப்பாய்வு செய்யும் திறன் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications