எக்ஸ், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான எலான் மஸ்க் கடுமையான உழைப்புக்கும் வெற்றிக்காக எந்தளவுக்கு துணியும் மனப்பான்மை கொண்டவர் என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
இந்த பில்லியனர் தனது தொழில், குடும்ப பொறுப்பு, போட்டியாளர்களிடம் சமூக தளங்களில் மோதுவது உள்பட எல்லாவற்றையும் திறமையாகச் செய்துவருகிறார்.

அவரது விருப்பங்கள் அனைத்தையும் திறம்பட நிர்வகிக்கும் எலான் மஸ்கின் டிக்ஷ்னரியில் வொர்க் - லைப் பேலன்ஸ் என்ற வார்த்தைக்கு மட்டும் இடமேயில்லை. வேலை என்று வந்துவிட்டால் வெறித்தனமாக ஈடுபடுவார் எலான் மஸ்க்.
2010 ஆம் ஆண்டில் ஒரு பேட்டியில் எலான் மஸ்க், தொழில்முனைவோருக்கு அயராத உழைப்பையும், கடுமையான வேலை திட்டத்தையும் கொண்டிருந்தால் வெற்றி நிச்சயம் என்று போதித்திருந்தார்.
வாரத்துக்கு 80 முதல் 100 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். இப்படி வேலை செய்தால் மற்றவர்கள் ஒரு வேலையை ஓராண்டுக்குள் முடித்தால் உங்களால் அதை நான்கே மாதத்தில் செய்து முடித்து விட முடியும் என்று கூறினார்.
இது அவரது போதனை அல்ல. எலான் மஸ்க் இப்படித்தான் தினசரி வேலை பார்க்கிறார். அதேபோல் எலான் மஸ்க் தொழில்முனைவோரை பணியாற்ற சொல்கிறார், ஆனால் நாராயணமூர்த்தி சொன்னது ஊழியர்களை, இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
2013இல் அளித்த ஒரு பேட்டியில் தான் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதாகும் வேலை செய்தாலும் குடும்ப வாழ்க்கையை பேணுவதாகவும் கூறினார். குடும்பத்தார் நேரடியாகப் பேசும் சமயங்கள் தவிர அவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்கிறார்.
வெற்றியாளர்களின் கடுமையான உழைப்பு 80 முதல் 100 மணிநேரமாக இருந்தாலும் அது ஒரு மந்திரமாகும் என்கிறார் மஸ்க். அதேவேளையில் அந்த உழைப்பு ஒரு சமயத்தில் அயர்ச்சியை ஏற்படுத்தும் என மஸ்க் ஒப்புக் கொள்கிறார்.
கடுமையான தொடர்ச்சியான உழைப்பு எலான் வாழ்க்கையிலும் விளையாடியுள்ளது. அவரது சகோதரரின் திருமணத்துக்குச் செல்ல முடியாத சூழ்நிலை கூட உருவானது. பல நாட்கள் அவர் தனது பேக்டரியிலேயே தங்கி வேலை பார்த்திருக்கிறார். இதனால் அவரது பிள்ளைகள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடாமல் போன சமயங்களும் உண்டு.
இரவு முழுக்க உழைத்துவிட்டு தனது 47ஆவது பிறந்த நாளைக் கூட கொண்டாட முடியாமல் போனதாக வருத்தத்துடன் மஸ்க் கூறினார். இந்த சவால்களையும் மீறி தனது கடுமையான உழைப்புதான் தனக்கு வெற்றியைக் கொண்டு வந்து மாலையாகத் தொடுத்தது எனப் பெருமையாகக் கூறுகிறார் மஸ்க்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களில் அவரது சாதனைகள் அனைத்துக்கும் அவரது கடுமையான உழைப்பே அடிப்படையாகும். இன்றைக்கு அவர் உலகில் செல்வாக்கு மிகுந்த நபராகத் திகழ்கிறார்.
கோவிட் பாதிப்புக்குப் பின்னர் புதிய வேலை முறைகள் பற்றிய விவாதம் எழுந்தபோது வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை வந்தது. ஆனால் எலான் மஸ்க் இது தவறான நடைமுறை என்று வர்ணித்தார்.
எப்படியிருந்தாலும் வேலைக்கான அவரது அணுகுமுறை ஆய்வாளர்களிடையே அதிக வேலை மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications