அமெரிக்கா: அமெரிக்க அதிபர் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்றால் இந்தியர்களின் கிரீன் கார்டு விண்ணப்ப பிரச்சினைகளை சரி செய்வார் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். இவர்களில் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார். உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கக்கூடிய எலான் மஸ்க் , டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த தலைமை செயல் அதிகாரொ அரவிந்த் ஸ்ரீநிவாஸ் கிரீன் கார்டு விண்ணப்பம் செய்து மூன்று ஆண்டுகளாக காத்திருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் தற்போது அமெரிக்க விசாவுக்கான விண்ணப்ப நடைமுறைகள் தலைகீழாக இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமலில் இருக்கும் விதிமுறைகள் அதிக திறன் கொண்ட நபர்கள் சட்டரீதியாக அமெரிக்காவிற்குள் வருவதை கடினமாக்குகிறது, ஆனால் கிரிமினல்கள் எளிதில் நுழைகின்றனர் என கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கும் போது இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். முன்னதாக அரவிந்த் ஸ்ரீநிவாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் மூன்று ஆண்டுகளாக நான் கிரீன் கார்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கிறேன், இதுவரை எனக்கு அது கிடைக்கவில்லை, இதற்கு என்ன காரணம் என்பதும் தெரிய வரவில்லை என தெரிவித்துள்ளார்.
வேலை நிமித்தமாக அமெரிக்கா செல்பவர்கள் அங்கே நிரந்தரமாக குடியிருப்பதற்கு கிரீன் கார்டு பெற வேண்டும். இதற்கான விண்ணப்ப நடைமுறைகள் கடுமையாக உள்ளன. எனவே அத்தனை எளிதாக கிரீன் கார்டு கிடைத்துவிடாது. அரவிந்த் ஸ்ரீநிவாஸ் சென்னை ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர் ஆவார்.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியில் செயல்பட்டு வருகிறார். இவர் சாம் ஆல்ட் மேன்-இன் ஓபன்ஏஐ நிறுவனத்தில் பணிபுரிந்தவர். சாட் ஜிபிடி இந்த நிறுவனத்தின் தயாரிப்பு தான். பின்னர் 2022 ஆம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Perplexityஐ தொடங்கினார். அதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் இண்டெர்னாக பணிபுரிந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கும் , கமலா ஹாரிஸுக்கும் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. இதில் தொழிலதிபர்களின் ஆதரவு டொனாட்ல் ட்ரம்புக்கே கிடைத்திருக்கிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications