பொதுவாக வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்கள் ஒருவரின் டிகிரி, அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனங்களின் பெயர், திறன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் பணியமர்த்தும். அதோடு பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கும் டிகிரி என்பது அடிப்படையான விஷயமாக பெரும்பாலான நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன. ஆனால் இந்த பாரம்பரிய முறையை தகர்த்தெறிந்து தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய திறமை மட்டும் இருந்தால் போதும்.. என்ற கருத்தை மட்டும் முதன்மைப்படுத்தி எலான் மஸ்க் ஒரு பதிவை பகிர்ந்திருக்கிறார்.
எலான் மஸ்க் தனது சமீபத்திய X போஸ்டில் தனது லட்சிய திட்டமான "எவ்ரிதிங்" அப்ளிகேஷனை திறம்பட செய்து முடிக்க பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதாக பதிவிட்டிருக்கிறார். அதற்காக தன்னுடன் இணைந்து செயல்பட ஹார்ட்கோர் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு மஸ்க் அழைப்பு விடுத்துள்ளார். இவர் தன்னுடைய பதிவில், "நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள்? எந்த பள்ளிக்குச் சென்றீர்கள்? அல்லது எந்த பெரிய பெயர் பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தீர்கள்? என்பதெல்லாம் எங்களுக்கு கவலையே இல்லை. உங்களுடைய கோடை (Code) மட்டும் எங்களுக்கு அனுப்புங்கள் என்று கூறி.. தனது பதிவை போஸ்ட் செய்திருந்தார்.

பணிஅமர்த்துவதற்கு முறையான கல்வி அவசியம் இல்லை என்பதை மஸ்க் சுட்டிக் காட்டுவது இது முதன்முறை கிடையாது. பல ஆண்டுகளாக படித்து வாங்கிய பட்டங்களை விட திறன்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் திறனுக்கு தான் அவர் முன்னுரிமை வழங்கி வருகிறார். 2014-ஆம் ஆண்டில் டெஸ்லாவில் பணிபுரிய பல்கலைக்கழக பட்டம் தேவையில்லை என்பதையும் இதற்கு முன்னர் மஸ்க் தெளிவுபடுத்தியிருந்தார்.
எலான் மஸ்க்கை பொறுத்தவரையில் ஒரு நபர் பணியில் இருக்கும் போது தன்னால் என்ன செய்ய முடியும்? என்பதை கூறினாலே போதுமானது. மனப்பாடத்திற்கு பதிலாக கல்வி அமைப்புகள் எவ்வாறு சிக்கல்களை தீர்க்கும் திறன்களை வளர்க்கிறது என்பதற்குத்தான் மஸ்க் இதுவரையில் முன்னுரிமை அளித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் இப்போது எக்ஸ் ஆகியவற்றில் அவர் பணியமர்த்தும் நடைமுறைகளில் அவருடைய கண்ணோட்டத்தை தெள்ளத்தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
மஸ்கின் இந்த புதுமையான கண்ணோட்டத்திற்கு ஆதரவாளர்களும் உள்ளனர். அதே சமயத்தில் விமர்சகர்களும் உள்ளனர். பாரம்பரியமற்ற பின்னணியில் இவர் திறமையான நபர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை சிலர் சிறந்த வாய்ப்பாக பார்க்கின்றனர். மற்றவர்கள் இந்த நடைமுறை உண்மைக்கு மாறானதாக இருப்பதாக விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.
இந்த எவ்ரிதிங் செயலியை பொருத்தவரையில் பணம் அனுப்புதல், மெசேஜ் செய்தல், இ-காமர்ஸ், மல்டிமீடியா போன்ற அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் இணைப்பதே இதன் நோக்கம். 2025 ஆம் ஆண்டுக்குள் பல புதிய அம்சங்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் கட்டண சேவையான X மணி, மல்டிமீடியாவிற்காக X டிவி ஆகியவை அடங்கும்.


Click it and Unblock the Notifications