பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்த ஆண்டிலேயே தான் இந்தியா வருகை தர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்குடன் தொலைபேசியில் உரையாடினார். ஏப்ரல் 18ஆம் தேதி இருவருக்கும் இடையே இந்த உரையாடல் நடைபெற்றது. அப்போது தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க துறைகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி "எலான் மாஸ்க் உடன் பேசினேன் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். முன்னதாக வாஷிங்டனுக்கு நான் பயணம் செய்திருந்தபோது எலான் மஸ்கை சந்தித்திருந்தேன் அந்த பயணத்தில் நாங்கள் பேசிய விஷயங்கள் குறித்தும் நாங்கள் இந்த தொலைபேசி உரையாடலின் போது ஆலோசனை நடத்தினோம்" எனக் கூறியிருக்கிறார்.
தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய பிரிவுகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து நாங்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தினோம் என குறிப்பிட்டு இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த பிரிவுகளில் எல்லாம் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பதிவினை குறிப்பிட்டு பதில் வெளியிட்டுள்ள எலான் மஸ்க் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதை கௌரவமாக கருதுகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த ஆண்டு எலான் மஸ்க் இந்தியாவுக்கு வருகை தருவது உறுதியாகி இருக்கிறது. நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்கை சந்தித்து பேசி இருந்தார். கூடிய விரைவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்ய இருக்கிறது.
எலான் மஸ்க் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க ஏதுவாக பல்வேறு கொள்கை ரீதியான மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவில் டெஸ்லா நிறுவன கார்களை விற்பனை செய்வதற்கான பணிகளை டெஸ்லா நிறுவனம் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்கான ஆட்கள் தேர்வு பணிகளையும் விரிவுபடுத்தியிருக்கிறது. இந்தியாவில் தங்கள் கார்களுக்கான சார்ஜிங் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் டெஸ்லா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த சூழலில் தான் எலான் மஸ்க் இந்தியாவிற்கு தான் வருகை தர இருப்பது குறித்து அறிவித்திருக்கிறார்.
டெஸ்லா நிறுவன கார்களின் விற்பனையை தொடங்கி வைக்கும் நிகழ்வுக்காக அவர் வருகை தருகிறாரா என்பது தெரிய வரவில்லை. இருந்தாலும் எலான் மஸ்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.


Click it and Unblock the Notifications