உலகின் மெகா கோடீஸ்வரர் எலான் மஸ்க் மற்ற தொழிலதிபர்களை காட்டிலும் தனித்துவமான மனிதர். ரிஸ்க் எடுப்பது எல்லாம் இவருக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. இவரது செயல்கள ஒவ்வொன்றும் உலகமே அவரை திரும்பி பார்க்க வைக்கும். இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக மக்களை விண்வெளி சுற்றுலா அனுப்பும் திட்டத்தை அறிமுகம் செய்தது.
டிவிட்டரில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். பின் அந்த நிறுவனத்தை 4,400 கோடி டாலருக்கு வாங்கி அதனை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார். தனது குழந்தைகள் படிப்பதற்காகவே தனது பள்ளியை உருவாக்கினார்.

தற்போது எலான் மஸ்க் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் அஸ்டின் நகரில் சொந்தமாக ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் 10 கோடி டாலரும் நன்கொடையாக அளித்துள்ளார் எனவும் தகவல். தற்போது இந்த செய்திதான் உலகம் முழுவதும் பரவலாக பேசும்பொருளாகி உள்ளது.
எலான் மஸ்கின் வரி தாக்கல் அடிப்படையில், போர்ப்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எலான் மஸ்க் அஸ்டின் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக ஒரு பள்ளியை தொடங்க உள்ளார். இதற்காக ஒரு புதிய தொண்டு நிறுவனமான தி பவுண்டேஷனுக்கு 10 கோடி டாலர் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
இங்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (எஸ்.டி.இ.எம்.) பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படும். முதலில் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். அதுவும் தகுதி அடிப்படையில்தான் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். பள்ளி கல்வியை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.
தொண்டு நிறுவனம் ஜோர்ஜியாவில் உள்ள தெற்கு கல்லூரிகளின் சங்கம் மற்றும் கல்லூரிகளின் பள்ளிகள் ஆணையத்திடம் பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் கோரும் என கூறப்படுகிறது.
பள்ளி மற்றும் பல்கலைக்கழகம் தொடங்குவது தொடர்பாக எலான் மஸ்க் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. 2014ல் எலான் மஸ்க் தனது 5 குழந்தைகள் படிப்பதற்காக ஆட் அஸ்ட்ரா என்ற சிறிய தனியார் பள்ளியை தொடங்கினார்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் குழந்தைகளையும் அதில் சேர்த்து கொண்டார். அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே ஒரு வகுப்பறைதான். இந்த பள்ளிக்கும் ஒரே ஆசிரியர்தான். அந்த ஆசிரியரும் விண்வெளி ஆராய்ச்சி முதல் எந்திரங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டும்தான் சொல்லி கொடுப்பார். தற்போது எலான் மஸ்க்குக்கு மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications