டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்குக்கு இப்போது 11 வது குழந்தை பிறந்துள்ளது. அவரது நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியரும், கேர்ள்பிரெண்டுமான ஷிவான் ஜில்லிஸுக்கு இந்தக் குழந்தை பிறந்தது.
நியூரோலிங்க் நிறுவனத்தின் ஆபரேஷன்ஸ் மற்றும் ஸ்பெஷல் புராஜக்ட்ஸ்களின் டைரக்டராக இருந்தவர் ஷிவான் ஜில்லிஸ். ஜில்லிஸுக்கு 2021 ஆம் ஆண்டில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

எலான் மஸ்க்குக்கு முதல் மனைவி ஜஸ்டின் மூலமாக ஐந்து குழந்தைகளும், இரண்டாவது மனைவியான கனடா நாட்டு இசைக்கலைஞர் கிரிம்ஸ் மூலம் மூன்று குழந்தைகளும் இப்போது ஷிவான் ஜில்லிஸ் மூலம் மூன்று குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் உள்ளன.
2022 வரை ஜில்லிஸுக்கும் மஸ்குக்கும் உள்ள உறவு வெளியே தெரியவில்லை. அவர்கள் தங்களது இரட்டைக் குழந்தைகளின் பெயர் மாற்றத்துக்காக விண்ணப்பித்த போது தான் விஷயம் அம்பலமானது.
அவர்களது உறவு பற்றி மஸ்க்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசாக்சன் குறிப்பிட்டுள்ளார். மஸ்க்கும் ஜில்லிஸும் தங்களது இரட்டைக் குழந்தைகளை வைத்திருக்கும் புகைப்படத்தை வால்டர் ஐசாக்சன் வெளியிட்டிருந்தார்.
மஸ்க்கின் தொழில் வாழ்க்கையில் ஜில்லிஸ் முக்கியப் பங்கை ஆற்றி வருகிறார். 2017இல் அவர் மஸ்க்கின் நிறுவனமான நியூரோலிங்க்கில் சேர்ந்தார். மூளை-கம்ப்யூட்டர் இன்டர்பேஸ் பற்றி நியூரோலிங்க் நிறுவனம் ஆய்ந்து வருகிறது.
நியூரோலிங்க்கில் ஜில்லிஸ் சேருவதற்கு முன்பாக மஸ்க்கின் மற்றொரு நிறுவனமான ஓபன் ஏஐயில் வேலை பார்த்து வந்தார். மனித சமுதாயத்துக்கு ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மூலம் நன்மைகளைச் செய்வது பற்றிய ஆராய்ச்சியில் ஓபன் ஐஏ நிறுவனம் இறங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஓன்டாரியா மாகாணத்தில் உள்ள மார்க்ஹாமில் ஜில்லிஸ் பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு அவர் பெண்கள் ஐஸ் ஹாக்கி டீமில் விளையாடினார். பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் டிகிரி முடித்தார்.
ஐபிஎம்மில் தனது வாழ்க்கையை தொடங்கிய ஜில்லிஸ் பின்னர் புளூம்பெர்க் பீட்டா நிறுவனத்துக்கு மாறினார்.அதைத் தொடர்ந்து ஓபன் ஏஐ, நியூரோலிங்குக்கு மாறினார்.
இதனிடையே உலக மக்கள்தொகை குறித்து தனது கவலையை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல் நாகரிகத்தின் எதிர்காலத்துக்கு நல்லது என்று மஸ்க் கருதுகிறார்.
அதிக புத்திசாலித்தனம் கொண்ட மனிதர்கள் அதிக பிள்ளைகளை பெற்றால் உலகத்துக்கு நல்லது என்று மஸ்க் கூறுகிறார். தனது குடும்பத்தையும் தொழிலையும் மஸ்க் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறார்.
இதனிடையே மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பெண் ஊழியரிடம் முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்தப் பெண்ணிடம் தனக்கு குழந்தை பெற்றுத்தருமாறு எலான் மஸ்க் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications