உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI-ஐக் கைப்பற்றுவதற்கான கடும் போட்டி தற்போது நடைபெற்று வரும் வேளையில், எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு, அந்நிறுவனத்தை வாங்குவதற்காக 97.4 பில்லியன் டாலர் தொகையை கொடுக்க தயார் என இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் தனது திட்டத்தை முன்வைத்தது.
OpenAI நிறுவனத்தை லாப நோக்க நிறுவனமாக மாற்ற வேண்டும் என அதன் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் திட்டமிட்டு வரும் வேளையில், இந்நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் அதன் பயண திசை தொடர்பாக எலான் மஸ்க் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் இருவருக்கும் அவ்வபோது கருத்து மோதல் ஏற்படும்.

இப்படி தான், இந்த முறையும் நடந்துள்ளது, எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு ஒப்பன் ஏஐ நிறுவனத்தை 97 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அறிவித்ததும். சாம் ஆல்ட்மேன் OpenAI நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டம் ஏதுமில்லை என அறிவித்தார்.
இதை தொடர்ந்து சாம் ஆல்ட்மேன் X தளத்தில் எலான் மஸ்க்-ஐ வம்புக்கு இழுக்கும் வகையில், நீங்க வேணும்ன்னா ட்விட்டரை எனக்கு 9.74 பில்லியன் டாலருக்கு கொடுங்க வாங்கிக்கொள்கிறேன் என பதிவிட்டார். அதாவது எலான் மஸ்க் சொன்ன விலையில் 10 சதவீத தொகைக்கு டிவிட்டரை வாங்குவதாக அறிவித்தார். இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான மதிப்பீட்டை வைத்து சாம் ஆல்ட்மேன் கிண்டல் செய்தார்.
இதில் கடுப்பான எலான் மஸ்க், டிவிட்டரிலேயே சாம் ஆல்ட்மேனை "மோசடி செய்பவர்" என்றும்"ஸ்கேம் ஆல்ட்மேன்" என்றும் விமர்சனம் செய்தார். இது டெக் வல்லுனர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மேலும், சாம் ஆல்ட்மேன் அமெரிக்க அரசுடன் இணைந்து "ஸ்டார்கேட்" என்ற ஒரு பெரிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். மஸ்கின் இந்த கையகப்படுத்தும் முயற்சி, ஸ்டார்கேட் திட்டத்தையும் கணிசமாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வால் ஸ்டிரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, எலான் மஸ்க் தனது 97.4 பில்லியன் டாலர் ஆஃபரை அவரது வழக்கறிஞர் மார்க் டோபெராஃப் மூலம் அதிகாரப்பூர்வமாக OpenAI நிர்வாகத்திடம் முன்வைத்தார்.
எலான் மஸ்க் தனியாக OpenAI நிறுவனத்தை வாங்கவில்லை வேலர் ஈக்விட்டி பார்ட்னர்ஸ், பாரன் கேபிடல், அட்ரைட்ஸ் மேனேஜ்மென்ட், விஒய் கேபிடல் மற்றும் எண்டெவர் தலைமை நிர்வாக அதிகாரி அரி இமானுவேல் உள்ளிட்டோர் அடங்கிய முதலீட்டுக் குழு தான் வாங்குகிறது.


Click it and Unblock the Notifications