துபாய்: எலான் மஸ்கிற்கு சொந்தமான தி போரிங் கம்பெனி துபாயில் பூமிக்கடியில் லூப் சாலைகளை அமைத்து துபாயின் போக்குவரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது.
எலான் மஸ்க் மின்சார கார்களுக்கான டெஸ்லா, விண்வெளி தொழில்நுட்பங்களுக்கான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றை தவிர்த்து சுரங்கப்பாதைகள் தொடர்பாக தி போரிங் கம்பெனி என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பூமிக்கு அடியில் சுரங்க பாதைகளை அமைத்து லூப் அடிப்படையில் அதிவேகத்தில் வாகனங்களை இயக்கி மக்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் துபாயில் முதல் கட்டமாக துபாய் லூப் சுரங்கப்பாதையை கட்டமைக்கும் பணி எலான் மஸ்கின் தி போரிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி துபாயில் 17 கிலோ மீட்டர் தொலைவில் அதிவேக போக்குவரத்தை உறுதி செய்யக்கூடிய சுரங்க பாதையை தி போரிங் நிறுவனம் அமைக்க இருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் துபாயின் நடைபெற்ற உலக அரசுகள் மாநாட்டில் கலந்து கொண்ட போது இந்த புதிய திட்டம் குறித்து அறிவிப்பையும் எலான் மஸ்க் நிறுவனம் இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதையும் அறிவித்தார்.
இதற்காக ஐக்கிய அரபு அமீரகாரத்துடன் எலான் மஸ்க் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. முதல் கட்டமாக 11 நிலையங்கள் கொண்ட லூப் சுரங்கபாதை அமைக்கப்பட இருக்கிறது. இந்த சுரங்கப் பாதையில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வாகனங்கள் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கே மின்சார வாகனங்கள் மட்டும் தான் இயக்கப்படுமாம்.
இது ஏற்கனவே அமெரிக்காவில் செயல்பாட்டில் இருக்கும் வேகாஸ் லூப்பினை அடிப்படை மாடலாக கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் தொடங்கப்பட்ட இந்த லூப் சுரங்கப்பாதையில் வெறும் மின்சார வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஐந்து நிலையங்களுடன் அதிவேக பயணத்தை இந்த லூப் சாலையானது உறுதிப்படுத்துகிறது. துபாயில் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் கவனம் செலுத்தி இது அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் பயணிகள் இந்த லூப் சாலையில் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது வரும் காலங்களில் ஒரு மணி நேரத்துக்கு 1 லட்சம் பேர் என மாற்றப்படும் என சொல்லப்படுகிறது.
2050க்குள் துபாயை பூஜ்ஜிய காற்று மாசு நகராக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதால் சுற்றுச்சூழல் சூழல் நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு இந்த லூப் சாலை அமைக்கப்படுவதாகவும் இதில் மின்சார வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications