எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் மூலம் நாடு முழுவதும் இன்டர்நெட் சேவை வழங்க வர்த்தக ஒப்பந்தம் மூன்று மாதங்களில் இறுதி செய்யப்படும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி நீக்கப்பட்டதிலிருந்து வங்கதேச அரசை வழிநடத்தி வரும் முஹம்மது யூனுஸ், இந்த ஒப்பந்தம் எதிர்கால அரசியல் எழுச்சிகளால் பாதிக்க முடியாத நம்பகமான இன்டர்நெட் சேவையை வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வங்கதேசத்தில் பல வாரங்கள் நீடித்த மாணவர்களின் வன்முறை போராட்டங்கள் காரணமாக அப்போதைய பிரதமராக இருந்த ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு தப்பிச் சென்றதால், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால அரசின் பொறுப்பை நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ், ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில், "ஸ்டார்லிங்க் சேவை தொடங்கப்பட்டால், எந்த அரசுக்கும் இன்டர்நெட் அணுகலை முடக்கவோ அல்லது குடிமக்களை டிஜிட்டல் உலகிலிருந்து தனிமைப்படுத்தவோ முடியாது," என்று முஹம்மது யூனுஸ் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட உரையில் தெரிவித்துள்ளார். அதாவது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் போராட்டங்கள் நாடு முழுவதும் பரவியபோது, அதிகாரிகள் இன்டர்நெட் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை நிறுத்தினர். இந்நிலையில், ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அடிப்படையிலான தொழில்நுட்பம், அரசாங்கத்தால் விதிக்கப்படும் தடைகளை குறைக்கும் என்று இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
முஹம்மது யூனுஸ் கூறுகையில், பணவீக்கம் அரசின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பணவீக்கம் 9.32% ஆக சரிந்துள்ளது, இது கடந்த 22 மாதங்களில் காணப்பட்ட மிகக்குறைந்த அளவு என்று அவர் குறிப்பிட்டார். மேலும், ஜூன் மாதத்திற்குள் பணவீக்கம் 8% க்கும் கீழே குறையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2026 ஜூன் வரை நாட்டில் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் மீண்டும் உறுதியளித்துள்ளார். எதிர்வரும் தேர்தல் வங்கதேச வரலாற்றில் மிகவும் சுதந்திரமானது, நியாயமானது மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியது ஆக இருக்கும் என்பதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள்," என்று முஹம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications