மும்பை: உலக அளவில் புகழ்பெற்ற துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டடத்தை கட்டிய எம்மார் பிராப்பர்ட்டீஸ் ( Emaar Properties) நிறுவனம் தற்போது மும்பையில் 2000 கோடி முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாம்.
சர்வதேச அளவில் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக எம்மார் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் இருக்கிறது. உலகிலேயே உயரமான கட்டிடமான பூர்க் கலிஃபாவை கட்டமைத்தது இந்த நிறுவனம்தான். தற்போது எம்மார் பிராப்பர்ட்டீஸ் குழுமம் இந்தியாவில் தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளது.

குறிப்பாக அடுத்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்குள் மும்பையில் ரியல் எஸ்டேட் துறை குறிப்பாக ஆடம்பர ரியல் எஸ்டேட் பிரிவு வேகமாக வளர்ச்சி அடையும் என கணித்துள்ள இந்த நிறுவனம் 2000 கோடி முதலீடு செய்ய தயாராக இருக்கிறதாம்.
எம்மார் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான கல்யாண் சக்கரவர்த்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே எம்மார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் குரு கிராம், மொகாலி, லக்னோ, இந்தூர், ஜெய்ப்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் திட்ட பணிகளை கையில் எடுத்து நடத்தி வருகிறது. முதன்முறையாக இந்த நிறுவனம் மும்பையில் தன்னுடைய கவனத்தை திருப்பி உள்ளது.
மும்பைக்கு அருகில் உள்ள அலிபாக், ராய்கார்ட் மாவட்டங்களில் ஆடம்பர குடியிருப்புகளை கட்டமைக்கும் திட்ட பணிகளை கையில் எடுக்க இருக்கிறதாம். நீண்ட காலமாக மும்பையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என தெரிவித்துள்ள எம்மார் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரியல் எஸ்டேட் சந்தை மும்பையில் தான் இருக்கிறது என கூறுகிறது.
மும்பையில் இருக்கும் பொருளாதார நடவடிக்கைகள் அங்கே இருப்பவர்களின் செல்வ வளர்ச்சி மற்றும் உலகத்தோடு மும்பைக்கு இருக்கக்கூடிய தொடர்பு ஆகியவை இந்தியாவிலேயே மிகவும் ஈர்க்கக்கூடிய பகுதியாக மும்பையை மாற்றி உள்ளது என எம்மார் குழுமம் கூறுகிறது.
தெற்கு மும்பையில் இருந்து படகு மூலம் சென்று வரக்கூடிய அலிபாக் பகுதியில் எம்மார் நிறுவனம் கவனம் செலுத்துவதற்கு காரணம் இந்த பகுதியில் அடல் சேது துறைமுக இணைப்பு திட்டம், நவிமும்பை விமான நிலையம் உள்ளிட்டவை வர இருக்கின்றன. எனவே இங்கே ரியல் எஸ்டேட்டுக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கும் என தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட 25 ஏக்கர் பரப்பளவில் 84 வில்லாக்கள் இங்கே கட்டமைக்கப்பட இருப்பதாகவும் ஒரு வில்லாவின் மதிப்பு 9 கோடி முதல் 16 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கிறது. மேலும் இந்த திட்டத்திற்காக எம்மார் நிறுவனம் 400 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக கூறுகிறது. அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளில் தங்களின் கவனம் மும்பையில் இருக்கும் என கூறுகிறது.


Click it and Unblock the Notifications