டெல்லி: இந்தியா மற்றும் கத்தார் இடையிலான உறவினை மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளும் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
கத்தார் நாட்டு தலைவர் ஷேக் தமீம் பின் அஹமத் அல் தானி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்தார். தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். இதனை அடுத்து இந்தியா மற்றும் கத்தார் தொழில் கூட்டமைப்பினர் சார்பாக டெல்லியில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கத்தார் தலைவர் ஷேக் தமீம் கலந்து கொண்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே இடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒப்பந்தங்களில் மத்திய வணிக அமைச்சர் பியூஷ் கோயல் கையெழுத்திட்டார்.
அப்போது பேசிய அமைச்சர் கோயல் இந்தியாவும் கத்தாரும் போட்டியாளர்கள் அல்ல இருவரும் நட்பு நாடுகள் என தெரிவித்தார். எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவு ஆகிய பிரிவுகளின் இரண்டு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன என குறிப்பிட்டார். இரு நாடுகளும் வளர்ச்சிக்கு தேவையான துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா தற்போது தன்னிறைவை நோக்கி பயணம் செய்து வரும் வேளையில் கத்தார் அந்த பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என கூறினார்.
இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் என அப்போது பியூஷ் கோயல் குறிப்பிட்டார். கொரோனா காலத்தில் இந்தியாவிற்கு கத்தார் பல்வேறு உதவிகளை செய்தது என கூறிய அவர் இதுவே இரு நாட்டின் உறவு அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்கிறது என்பதை காட்டுவதாக தெரிவித்தார். முன்னதாக இரட்டை வரிவிதிப்பு முறையை தவிர்ப்பது, வருமான வரி ஏய்ப்பை தடுப்பதில் இணைந்து செயல்படுவது என்பன தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
கத்தார் நாட்டு தலைவர் இரண்டாவது முறையாக அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார் . இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டில் அவர் இந்தியா வந்திருந்தார். இதில் அரிய நிகழ்வாக பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக விமான நிலையத்திற்கு சென்று கத்தார் தலைவர் நேரில் வரவேற்றார்.
இதனை அடுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்த பிரதமர் மோடி இரு நாடுகளுக்கு இடையிலான உறவை இன்னும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இந்த பயணத்தையும் சந்திப்பையும் தான் கருதுவதாக கூறியிருந்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications