சென்னை: கொரோனாவுக்குப் பிறகு ஊழியர்கள் அலுவலகங்களில் பணியாற்றும் நேரம் குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவிற்கு முன்பெல்லாம் அலுவலக வேலை நேரம் என்றால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என இருந்தது. தற்போது அது மாறி உள்ளது. அதாவது 10 மணி முதல் 4 மணி வரையில்தான் வேலை நேரம் என ஊழியர்கள் கருதுவதாக சொல்லப்படுகிறது .
ஊழியர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக வந்துவிட்டு முன்கூட்டியே கிளம்புவதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. கொரோனா காலகட்டத்தில் பொது முடக்கம் அமலில் இருந்ததால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தன.

பெருந்தொற்று முடிவடைந்து நிலைமை சீரடைந்த பிறகு ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என நிறுவனங்கள் அறிவுறுத்துகின்றன. இதற்கு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகிறது.
இதனிடைய கொரோனாவுக்குப் பிறகு ஊழியர்கள் பணி செய்யும் நேரம் என்பது பாரம்பரியமான 9 மணி முதல் 5 மணி வரை என்பது மாறி தற்போது 10 மணி முதல் 4 மணி வரை என குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
INRIX என்ற நிறுவனம் அண்மையில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் இந்த ஆய்வினை நடத்தியது. அதில் ஊழியர்கள் தாமதமாக அலுவலகத்திற்கு வந்துவிட்டு விரைவாக கிளம்புவதை விரும்புவதாக சொல்லப்படுகிறது. மேலும் சர்வதேச அளவில் பெரும்பாலான ஊழியர்கள் மத்தியில் வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை கொண்டு வர வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாகவே பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் மீட்டிங் உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே அலுவலகத்திற்கு செல்ல விரும்புவதாக பெரும்பாலான ஊழியர்கள் இந்த ஆய்வறிக்கையின் போது பதில் அளித்துள்ளனர்.
வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் அலுவலகம், குறிப்பிட்ட நாட்கள் வீடு என ஹைபிரிட் முறையில் வேலை செய்பவர்கள் அலுவலகத்திற்கு வந்தாலும் கூட பெரும்பான்மையான நேரம் வேலை செய்வதில்லை என்றும் குறுகிய காலம் மட்டுமே அலுவலகத்தில் இருந்து விட்டு வெளியேறி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்களில் நெகிழ்வு தன்மையுடன் கூடிய பணிநேரங்கள் மற்றும் மனநலம் சம்பந்தப்பட்ட ஆதரவு ,தன்னுடைய வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உதவும் நிகழ்வுகள் என்பன உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.
தேவையில்லாமல் அலுவலகத்தில் நீண்ட நேரத்தை செலவிட விரும்பவில்லை என்றும் பலரும் கூறுகின்றனர். வீட்டில் இருந்தே வேலை செய்யும் நடைமுறை நீக்கப்பட்டால் 39 சதவீத ஊழியர்கள் உடனடியாக அந்த நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு விடுவோம் என தெரிவித்துள்ளனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications