டெல்லி: இந்தியாவில் பெட்ரோலுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதை ஊக்குவிக்க மத்திய அரசு FAME உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக மத்திய அரசு மார்ச் 13ஆம் தேதி புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.

இது தொடர்பாக அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே வெளியிட்டுள்ள தகவலின் படி எலக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் அதாவது EMPS திட்டத்துக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 4 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் மத்திய அரசின் FAME 2 திட்டத்திற்கான ஒதுக்கீடானது 10,000 கோடியில் இருந்து 11,500 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் வாகனம் வாங்குவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியமானது மார்ச் 31, 2024 வரை விற்பனையான இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் 7,048 கோடி ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில் 5,311 கோடி ரூபாய் இருசக்கர வாகனங்களுக்கும், எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க 4,048 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட FAME திட்டமானது கிட்டத்தட்ட 1.2 மில்லியன் இருசக்கர வாகனங்களுக்கும், 1.41 லட்சம் மூன்று சக்கர வாகனங்களுக்கும், 14, 991 நான்கு சக்கர வாகனங்களுக்கும் மானியத்தை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 5, 829 கோடி ரூபாய் இதுவரை மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முன்பை விட எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. ஓலா, ஏதர், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் கவனம் செலுத்தி வருவதும் இதற்கு காரணம். 2024 ஆம் நிதியாண்டில் 8.50 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன இருப்பினும் இருசக்கர வாகன சந்தையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பங்கு வெறும் 4.5%ஆக மட்டுமே உள்ளது.
அதிக விலை மற்றும் போதிய சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது ஆகியவை காரணமாக மக்களிடம் மின்சார வாகனங்களை வாங்குவதில் சற்றே தயக்கம் நிலவுகிறது.
மத்திய அரசின் வாகன் தளத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் 81, 608 வாகனங்களை விற்பனை செய்துள்ளன. இது ஓராண்டில் 26% அதிகம். அதே வேளையில் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications