சென்னையில் இன்று எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் எக்கச்சமான கடைகளும், பிராண்டுகளும், ஆன்லைன் ஷாப்பிங் வசதிகளும் உள்ளது. ஆனால் 60களில் துவங்கி சுமார் 60 வருடம் சென்னையின் பல லட்சம் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு முக்கிய தேர்வாக இருந்தது விவேக்ஸ்.
தமிழ்நாட்டின் ரீடைல் வர்த்தக துறையின் அடையாளமாக இருந்த விவேக்ஸ் தற்போது அனைத்து கடைகளையும் மூடியுள்ள தகவல் பலருக்கும் அதிர்ச்சியான விஷயமாக அமைந்துள்ளது. குறிப்பாக 80களில் சென்னையில் இருந்தவர்களுக்கு..

தமிழ்நாட்டில் முதல் முறையாக புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை, ஒரு ரூபாய் கொடுத்து பொருளை வாங்கிக்கொண்டு மீத தொகையை மாத தவணையில் செல்லும் வர்த்தக முறைகளை அறிமுகம் செய்த பெருமை விவேக்ஸ் நிறுவனத்தையே சேரும்.
இந்த ஒரு ரூபாய் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் விவேக் ஹையர் பர்சேஸ் அண்ட் லீசிங் கம்பெனி லிமிடெட் என்ற பிரத்யேக NBFC நிறுவனத்தை 1991ல் உருவாக்கி. இந்த ஒரு ரூபாய் வர்த்தக முறையை பெரிய அளவில் விரிவாக்கம் செய்தது. இதை இன்றளவும் தமிழ்நாட்டில் பல நிறுவனங்கள் தங்களுடைய முக்கிய வர்த்தக முறையாக கொண்டு இயங்கி வருகின்றனர்
பின்னாளில் விவேக் ஹையர் பர்சேஸ் அண்ட் லீசிங் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தை அமெரிக்காவின் AIG குரூப் நிறுவனத்திற்கு விவேக்ஸ் குடும்பம் விற்றது.
இதுபோக இன்று பலர் புது ஐபோன், புது கேம், புது ப்ளேஸ்டேஷனை வாங்க விடிய விடிய காத்திருந்து வாங்குகின்றனர். ஆனால் 90களிலேயே விவேக்ஸ்-ன் புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனைக்காக பலர் விடிய விடிய காத்திருந்து பொருட்களை வாங்கியதும் நடந்துள்ளது. இதனால் விவேக்ஸ் தமிழ்நாட்டின் மக்களின் ஒரு எமோஷனாகவே இருந்து வந்தது.
விவேக்ஸ் கடைகள் மூடியது தொடர்பாக இந்நிறுவனத்தை நிர்வாகம் செய்து வந்த குடும்பம் கொடுத்த விளக்கத்தில் 1965 முதல் சென்னையின் ரீடைல் வர்த்தக துறையில் விவேக்ஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது, மிகுந்த ஆலோசனைக்கு பின்பு எங்களுடைய அனைத்து ரீடைல் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகங்கள் முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அனைத்து ஊழியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் அனைத்து ஆர்டர்களும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். எங்களுடைய 60 ஆண்டு கால பயணத்தில் எங்களுக்கு ஆதரவாக இருந்த வாடிக்கையாலர்களுக்கும், உதவியவர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.

1965ஆம் ஆண்டு மயிலாப்பூரில் முதல் விவேக்ஸ் கடை திறக்கப்பட்டது, அதன் பின்பு 1969ல் புரசைவாக்கம், 1980ல் தி.நகரில் கடை திறக்கப்பட்டது. இந்த கடை தான் விவேக்ஸ் பிராண்டின் பிரபலத்திற்கு முக்கியமானதாக விளங்கியது.
தி.நகர் கடைகளில் அப்போது அனைத்து வெளிநாட்டு பிராண்ட் வீட்டு உபயோக பொருட்களும் விற்கப்பட்டு வந்தது, இதன் மூலம் மிடில் கிளாஸ் மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அனைவருக்கும் முக்கிய ஷாப்பிங் தளமாக விவேக்ஸ் இருந்தது.
விவேக்ஸ்-ஐ துவங்கியது பி.ஏ.லட்சுமி நாராயண செட்டி என்பவர் தான், அவருடைய மறைவிற்கு பின்பு அவரது சகோதரர் பி.ஏ.கோதண்டராமன் செட்டி நிர்வாகத்தை கையில் எடுத்தார்.
ஹிந்து வெளியிட்டுள்ள தகவல் படி விவேக்ஸ் நிர்வாகம் தனது வர்த்தகத்தை மூட குடும்பத்தில் நிலவிய மாறுப்பட்ட கருத்துக்கள் தான் காரணம் என கூறப்படுவதாக தெரிவித்துள்ளது. இதேபோல் விவேக்ஸ்-ன் வர்த்தகம் முழுமையாக மூடப்படவில்லை, இது தற்காலிக நிறுத்தம் மட்டுமே எனவும், மீண்டும் களத்தில் இறங்கும் எனவும் இக்குடும்பத்திற்கு தொடர்புடையோர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications


