இந்தியாவில் தற்போது பெரும்பாலான நிறுவனங்கள், கொரோனா தொற்று காலத்தில் கொடுக்கப்பட்ட முழு வொர்க் ப்ரம் ஹோம் சலுகையைக் குறைத்து வாரத்தில் 2-3 நாள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற நடைமுறையில் செயல்பாட்டில் வைத்துள்ளது.
இது பெரும்பாலான நிறுவனங்களுக்கு நல்ல பலனைக் கொடுத்திருந்தாலும் பல நிர்வாகங்கள் தேக்கம் அடைந்துள்ளதாகக் கணித்துள்ளது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் வாரத்தில் 5-6 நாளும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற மாற்றத்தைக் கொண்டுவரத் துவங்கியுள்ளன.

அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், தனது ஊழியர்களுக்கு வழங்கி வந்த வீட்டில் இருந்து பணிபுரியும் (Work From Home - WFH) முறையை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இனி அனைத்து பிளிப்கார்ட் ஊழியர்களும் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்தில் நேரில் வந்து பணியாற்ற வேண்டும் என்று அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Work From Home சலுகையைப் பிற கார்ப்ரேட் நிறுவனங்களைப் போலவே சமீப காலமாக பிளிப்கார்ட்-ம் படிப்படியாகத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. முதலில், மூத்த அதிகாரிகளுக்கு, அதாவது துணைத் தலைவர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் தவறாமல் வந்து பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது இந்த முறை அனைத்து ஊழியர்களும் கொண்டுவரப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட்டில் எந்த துறையில் பணியாற்றினாலும் இனி அலுவலகத்திற்கு வந்து பணியற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பிளிப்கார்ட் கொண்டு வந்துள்ளது. இதனால் யார் எந்தப் பதவியில் இருந்தாலும், வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்தில் வந்து பணியாற்ற வேண்டியது கட்டாயம். பிளிப்கார்ட் நிறுவனம் இந்த புதிய மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மற்றொரு முக்கிய ஈகாமர்ஸ் தளமான அமேசானும் சில வாரங்களுக்கு முன்பு அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்தில் வந்து பணியாற்ற உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பிளிப்கார்ட் இந்த முடிவை தற்போது எடுத்துள்ளது. இதேபோல் குவிக் காமர்ஸ் பிரிவில் பெரும்பாலான நிறுவனத்தின் ஊழியர்கள் வாரத்தில் 5 நாளும் அலுவலகத்திற்கு வந்து தான் பணியாற்றி வருகின்றனர்.
பிளிப்கார்ட் நிறுவனம் அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாலும், இந்த நடைமுறை அடுத்த சில மாதங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றே தெரிகிறது. மேலும், சில குறிப்பிட்ட வேலைகளின் தன்மையைப் பொறுத்து சில ஊழியர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
உங்க நிறுவனத்தில் எப்படி..? இன்னும் வொர்க் ப்ரம் ஹோம் உண்டா இல்லை ஹைப்ரிட் மாடாலா..? மறக்கமாக கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications