கடந்த சில வருடங்களாக, இந்தியாவில் தொடர்ந்து கார்ப்பரேட் மோசடிகள் கொஞ்சம் பெரிய அளவில் நடந்து வருகின்றன. விஜய் மல்லையா, நிரவ் மோடி, நிதின் சந்தேஸரா என இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு, ஒழுக்கமாகத் திரும்பச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள்.
அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து, சட்டத்தின் முன் நிறுத்தி விசாரிக்க, மத்திய அரசு போராடிக் கொண்டு இருக்கிறது. மறு பக்கம் மெகுல் சோக்ஸி போன்றவர்கள் ஆண்டிகுவா போன்ற நாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். அது போன்ற நாடுகளுக்குச் தப்பிச் சென்றவர்களையும், இந்தியா அழைத்து வர தலையை உடைத்துக் கொள்கிறது மத்திய அரசு.

இன்னொரு பக்கம், இந்தியாவிலேயே இருக்கும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ், சட்ட விரோதமாக, ஹெச் டி ஐ எல் என்கிற ஒற்றை நிறுவனத்துக்கு கடன்களை வாரிக் கொடுத்த விஷயமும், சமீபத்தில் தான் வெளியானது. இவர் செய்த தவறால் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணம் போட்ட டெபாசிட்தாரர்கள், தங்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை உருவானது. இப்படி, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் நடக்கும் மோசமான சம்பவங்களை பட்டியலைப் போட்டுக் கொண்டே போகலாம்.
இப்போது, எடல்வைஸ் குழுமத்தின் (Edelweiss Group) நிறுவனர் மற்றும் தலைவர் ரஷேஷ் ஷா-க்கு ஒரு பெரிய ஊழலில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறையால் வளைக்கப்பட்டு இருக்கிறார். 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, அந்நிய செலாவணி ஊழலில் எடல்வைஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ராசேஷ் ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருக்கிறார்களாம்.
ராசேஷ் ஷாவை, இந்த அந்நிய செலாவணி தொடர்பான டாக்குமெண்ட்கள், கணக்கு வழக்குகள் மற்றும் ஆதாரங்களை, அமலாக்கத் துறை முன்பு ஆஜராகி சமர்பிக்கச் சொல்லி இருக்கிறார்களாம். எடல்வைஸ் குழுமத்தின் தலைவர் தவிர, ராசேஷ் ஷா உடன் வேலை பார்ப்பவர்களில் சிலரையும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறதாம். இதே போல, ராசேஷ் ஷாவுக்கு எதிராக, இன்னும் சில அந்நிய செலாவணி வழக்குகளை, மும்பை அமலாக்கத் துறை, விசாரித்து வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications