உலக அளவில் ஐடி நிறுவனங்கள் மந்த நிலையில் இருக்கின்றன. இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் செயல்படக்கூடிய பல்வேறு ஐடி நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை, ஐடி துறைக்கான தேவை மாறி வருவது ,அமெரிக்க பொருளாதார மந்த நிலை என பல காரணங்கள் இதற்கு முன் வைக்கப்படுகின்றன.ஐடி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரித்து அந்த வேலையில் இருக்கும் மனிதர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த பணிநீக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை நம்மால் காண முடிகிறது .

கொடுமையிலும் கொடுமையாக ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவருமே பணிநீக்கம் செய்யப்பட்ட சோகம் நிகழ்ந்திருக்கிறது . ரெடிட் தளத்தில் ஒரு பயனர் வெளியிட்டிருக்கும் பதிவில் தன்னுடைய மொத்த குடும்பமும் தற்போது வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது அடுத்து என்ன செய்வதென்று எங்கள் யாருக்குமே தெரியவில்லை என பதிவிட்டு இருக்கிறார்.
ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ள அந்த பயனர் எனக்கு கடந்த மார்ச் மாதம் வேலை போனது, என்னுடைய தந்தைக்கு மே மாதத்தில் வேலை போனது , ஜூலை மாதத்தில் என்னுடைய தாயாரும் வேலையை விட்டு நீக்கப்பட்டு இருக்கிறார் என குறிப்பிட்டு இருக்கிறார். நாங்கள் அனைவருமே டெத் துறையில் தான் வேலை செய்தோம். பேஸ்புக், அமேசான், ஆப்பிள் , கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் கிடையாது சாதாரணமான மத்திய அளவிலான ஒரு நிறுவனத்தில் சராசரி சம்பளத்திற்கு தான் நாங்கள் அனைவரும் வேலை செய்து வந்தோம் திடீரென அடுத்தடுத்து எங்கள் வேலை பறிபோயிருக்கிறது என பதிவிட்டு இருக்கிறார்.
அண்மையில் தான் செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதற்காக நான் என்னுடைய பெற்றோர் உடனே வந்து தங்க தொடங்கினேன் தற்போது அவர்களுக்கும் வேலை போய்விட்டது அடுத்து என்ன செய்வதென்றே என்னுடைய மொத்த குடும்பத்திற்கும் தெரியவில்லை எனக் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது.
ஒரு பயனர் நானும் என் கணவரும் இப்படித்தான் அடுத்தடுத்த மாதங்களிலேயே பணிநீக்கம் செய்யப்பட்டோம் என பதிவு செய்திருக்கிறார் .பலரும் அமெரிக்க அரசாங்கம் வழங்கக்கூடிய வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான பலன்களை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யுங்கள் என அறிவுரை வழங்கி இருக்கின்றனர். சிலர் தேவையற்ற செலவினங்களை குறைப்பது உங்களுக்கு நல்லதாக இருக்கும் என அறிவுரை வழங்கி இருக்கின்றனர்.
ஒரு குடும்பத்தில் அனைவருமே ஒரே துறையில் வேலை பார்த்தால் இப்படித்தான் ஆகும் என்பதற்கு இவர்கள் ஒரு பாடம் என ஒரு பயனர் பதிவு செய்திருக்கிறார் .2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 171 டெக் நிறுவனங்கள் 80250 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications