சமீபகாலமாக இளம் வயதிலேயே சாதனை படைக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மருத்துவத் துறையில் சாதனை புரிந்து, குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிவிட்டு தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார் புளோரிடாவைச் சேர்ந்த நபர் ஒருவர். பணி புரியும் நபர்களே நீண்ட காலம் தங்கள் ஓய்வூதியத்திற்காக சேமிக்கும் நிலையில், எப்படி இவர் குறுகிய காலத்தில் ஓய்வு பெற்றார்? எவ்வாறு இவருக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்தது? என்ற விவரங்கள் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
21 வயதில் செவிலியரானார் நத்தனேல் ஃபாரெல்லி என்ற நபர். இவர் ப்ளோரிடாவில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தே சிகிச்சை அளிக்கும் வகையில் ஹோம் இன்ஃபியூஷன் தெரபி என்ற சிகிச்சை அளிக்கும் நிறுவனத்தை தொடங்கினார்.

வெகு சீக்கிரம் இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்நிறுவனத்தை 12.5 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்தார். இது இந்திய மதிப்புக்கு ரூ.106 கோடி. இப்போது சுமார் 14 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக இருக்கும் 29 வயதான நத்தனேல், தனது பணியில் இருந்து ஓய்வு பெற்று தன் கர்ப்பிணி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
நத்தனேல் ரிவைட்டலைஸ் என்ற தனது நிறுவனத்தை 2020-ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது கோவிட் பெருந்தொற்று தீவிரமாக இருந்தது. இதனால் இவருடைய நிறுவனத்தில் செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கி நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் IV போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டது. கோவிட் சமயத்தில் இது போன்ற சேவைகளுக்கு அதிக தேவை இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே பல தனியார் நிறுவனங்கள் அவருடைய நிறுவனத்தை 1 மில்லியன் டாலர், 2 மில்லியன் டாலருக்கு வாங்க முன்வந்துள்ளனர். ஆனால் இந்தத் தொகை சரியான தொகை இல்லை. நிறுவனத்தை விற்ப்பதற்கு இது சரியான நேரம் இல்லை என்று நத்தனேல் விற்பனை செய்யாமல் இருந்துள்ளார்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிறுவனம் தொடங்கப்பட்ட போது செயல்பட்ட அதே வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடையாது என்பதை உணர்ந்த அவர், தனது நிறுவனத்தை விற்க முடிவு செய்தார். தனது நிறுவனம் பெரிய நிறுவனமாக செயல்பட்டால், அதில் பணிபுரியும் செவிலியர்களுக்கு சிறந்த பணியை வழங்க முடியும் என்றும் நம்பினார். அதோடு அவர் தனது குடும்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் எண்ணியுள்ளார்.
நத்தனேல் தனது ரிவைட்டலைஸ் நிறுவனத்தை அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றுக்கு 12.5 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்தார். பின்னர் ஒன்றரை ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார். தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வருகிறார். தற்போது தனது ஓய்வு வாழ்க்கையை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு சிறந்த முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார். தனது நண்பரின் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்துள்ளார்.
ஒருவேளை ஒரு மில்லியன் டாலருக்கு நிறுவனத்தைக் கேட்டபோது அவர் விற்பனை செய்திருந்தால்.. இவ்வளவு பெரிய வெற்றிக்கனியை எட்டி இருக்க மாட்டார். எனவே நின்று நிதானமாக முடிவு எடுக்கும்போது அனைத்தும் சாதகமாக அமையும் என்பதை இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications