ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள உறுப்பினர்கள் விரைவில் யூபிஐ மூலமாக PF பணத்தை எடுக்க இருக்கிறார்கள். இந்த அம்சத்தின் மற்றொரு சிறப்பு, இதற்கு உங்கள் நிறுவனங்களின் ஒப்புதல் கூடத் தேவையில்லை. நீண்ட காலமாகவே பிஎஃப் உறுப்பினர்கள் தங்களுடைய பணத்தை எடுக்க திண்டாடி வந்தனர். ஆனால் இனிமேல் இந்த பிரச்சனை இருக்காது. உறுப்பினர்களின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு தற்போது EPFO அமைப்பு தங்களுடைய டிஜிட்டல் சேவைகளை மாற்றி அமைத்து வருகிறது.
அதன் மற்றொரு கட்டமாகவே இந்த ஏடிஎம் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தங்களுடைய சேவையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அதோடு யூபிஐ மூலமாக pf பணத்தை எடுக்கும் வசதி இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், இதற்கான டெஸ்டிங் ப்ராசஸும் முடிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
எந்த ஒரு புது டிஜிட்டல் சேவையை வழங்க வேண்டுமானாலும் அதற்கு முன்பு எண்ணற்ற விஷயங்களை செய்ய வேண்டும். தற்போது இறுதி கட்டமாக டெஸ்டிங் வரை முடிந்திருந்தாலும் EPF அமைப்பின் கீழ் உள்ள 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு இதை செயல்படுத்துவதற்கு சாப்ட்வேர் புதுப்பிப்புகளை செய்ய வேண்டும். இதை தான் தற்போது EPFO அமைப்பு செய்து வருகிறது. இப்போது வரை இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் பிறகு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதேபோல EPFO இணையதளத்தில் கேஒய்சி சரிபார்ப்புக்கு படிவம் 31-ஐ நிரப்பி காத்திருக்க வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் ஆவணங்களில் எதுவும் சரியாக இல்லை என்றால் உடனே உங்களுடைய கிளைம் கோரிக்கை ரிஜெக்ட் செய்யப்பட்டுவிடும். அதாவது உங்களுடைய ஆதார் கார்டில் ஒரு விவரமும், உங்கள் பேங்க் அக்கவுண்டில் ஒரு விபரமும் இருந்தால் பிரச்சனை.
உதாரணமாக உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயரை இணைத்து வைத்திருக்கிறீர்கள். அதுவே உங்கள் வங்கி கணக்கில் கணவர் பெயரை இணைத்து வைத்திருந்தால் பிஎப் கோரிக்கை ரிஜெக்ட் செய்யப்பட்டுவிடும். எல்லாவற்றையும் முடிக்க ஏழு முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
EPFO 3.0: எப்படி ஏடிஎம் சேவையை பயன்படுத்த வேண்டும் தெரியுமா?: முதலில் உங்கள் பிஎஃப் அக்கவுண்டில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கியூஆர் கோடை ஜெனரேட் செய்ய வேண்டும். இதன் மூலம்தான் உங்களுடைய பிஎஃப் பணத்தை நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்ற முடியும். பணம் வங்கி கணக்கிற்கு வந்தவுடன், நீங்கள் எப்பொழுதும் போல யூபிஐ பயன்படுத்தி பணம் அனுப்பலாம் அல்லது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். இதற்கு உங்களுடைய நிறுவனத்தின் ஒப்புதல் தேவை இல்லை. மேலும் நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
வாட்ஸப் சேவை: இதற்கு கூடுதலாகத் தற்போது EPFO அமைப்பு வாட்ஸ்அப் சேவையையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்கு EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ நம்பர் வெளியிடப்படும். ஆனால் தற்போது வரை அது என்ன நம்பர் என்பதை EPFO அமைப்பு வெளியிடவில்லை. இனிவரும் நாட்களில் இந்த நம்பர் வெளியாகும். எனவே அந்த நம்பரை செய்திதாள்கள் அல்லது பிற அதிகாரப்பூர்வ செய்திதளங்கள் வாயிலாக தெரிந்து கொண்டு அந்த நம்பருக்கு "ஹலோ" என்று வாட்ஸ்அப் மெசேஜ் செய்தால் போதும். உங்களால் PF பேலன்ஸை எளிதில் சரி பார்க்க முடியும். கடைசியாக நீங்கள் செய்த ஐந்து பரிவர்த்தனை விவரங்கள், ஒருவேளை பிஎஃப் கிளைம் கோரிக்கை சமர்ப்பித்து இருந்தால் அதற்கான ஸ்டேட்டஸ் என்ன? போன்றவற்றை சில கிளிக்குகளில் தெரிந்து கொள்ளலாம்.
இனி வயதான உறுப்பினர்களும் எளிதில் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான் மக்களுக்கு அது எந்த அளவுக்கு உதவி இருக்கிறது என்ற விவரங்கள் தெரியவரும்.


Click it and Unblock the Notifications