இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யூபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்து பயன்படுத்தும் வசதி எப்போது முதல் அறிமுகம் ஆகும் என்ற அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.
நம்முடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை பல்வேறு தேவைகளுக்காக நாம் எடுத்து பயன்படுத்த முடியும். வீடு கட்டுவது, திருமண செலவுகள், கல்வி செலவுகள் என பல்வேறு தேவைகளுக்கும் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தில் கணிசமான தொகையை நாம் எடுக்கலாம். இப்போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும், உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும், இதனை அடுத்து பிஎஃப் அதிகாரிகள் நம் கோரிக்கையை பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்தால் பணம் அக்கவுண்டிற்கு வரும்.

ஒரு வேளை பிஎஃப் அதிகாரிகள் கோரிக்கையை நிராகரித்தால் மீண்டும் மீண்டும் விண்ணப்பம் செய்து காத்திருக்க வேண்டும். நம் வங்கி கணக்குகளை எப்படி யூபிஐ, ஏடிஎம் போன்ற டிஜிட்டல் முறைகளில் கையாளுகிறோமோ அதே போல பிஎஃப் கணக்கையும் நாம் டிஜிட்டல் முறையில் கையாளும் வசதி கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பிஎஃப் பணம் எடுப்பது நீண்ட பிராசஸ் கொண்டதாக இருப்பதால் அந்த பணத்தை யூபிஐ மற்றும் ஏடிஎம்கள் மூலம் எடுக்கும் வசதி கொண்டு வரப்படும் என ஈபிஎஃப்ஓ அறிவித்தது. ஈபிஎஃப்ஓ அமைப்பு யூபிஐ அடிப்படையிலான பணத்தை எடுக்கும் வசதிக்காக, சில முக்கிய வங்கிகளுடன் இணைந்து சோதனை நடவடிக்கைகளை பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் இதுவரை எந்த தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.
ஜூன் மாதம் வரும் என சொல்லப்பட்டது, பின்னர் ஆகஸ்ட், செப்டம்பர் என தொடர்ச்சியாக தாமதமாகி கொண்டே இருக்கிறது. இதற்கிடையே இந்த மாற்றத்துக்கு ஏற்ப பிஎஃப் அமைப்புகள் அப்டேட் செய்யப்பட்டு வருவதாகவும் சோதனை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது டிசம்பர் மாதத்திற்குள் இந்த அதிகாரப்பூர்வ சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால், பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பிஎஃப் பணத்தை யூபிஐ மூலமாக நேரடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மிக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் ஏடிஎம் வாயிலாகவும் ப்ணத்தை எடுத்து கொள்ளலாம்.
யூபிஐ அடிப்படையிலான பிஎஃப் சேவை EPFO 3.0 திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாம் எப்படி வங்கி கணக்குகளை டிஜிட்டல் முறையில் பயன்படுத்துகிறோமோ அதே போல பிஎஃப் கணக்கையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதே இதன் பிரதான நோக்கம். இந்த புதிய வசதி செயல்பாட்டுக்கு வரும் போது, கோடிக்கணக்கான ஊழியர்கள் எளிமையாக தங்களின் அவசர தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை எடுத்து பயனடையலாம்.


Click it and Unblock the Notifications

