ஒரு சில நேரங்களில் PF பேலன்ஸைப் பார்ப்பதற்கு வெப்சைட்டுக்குள் நுழைந்தால் திடீரென ஒரு மெசேஜ் வரும். அதில் உங்களுடைய அக்கவுண்ட் லாக் ஆகிவிட்டதாக காண்பிக்கும். இதை பார்த்த பலருக்கும் நம்முடைய பணம் என்ன ஆகப்போகிறதோ?, அதை எடுக்க முடியாமல் போய்விடுமோ? என ஒரு சில நிமிடங்களில் பல சிந்தனைகள் வந்து மறையும். இது போன்ற மெசேஜைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. உங்கள் பணம் எங்கும் போகாது. பாதுகாப்பாகத்தான் இருக்கும்.
அக்கவுண்ட் லாக் செய்யப்படுவது பல EPFO உறுப்பினர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை. அதிலும் ஈபிஎஃப்ஓ அமைப்பு தங்களுடைய டிஜிட்டல் சேவையை இன்னும் சிறப்பாக்கும் விதமாக பல மாற்றங்களைச் செய்து வருகிறது. இதுவும் இது போன்ற பிரச்சனை ஏற்பட ஒரு காரணம். ஒருவேளை உங்களுக்கும் இதே போன்ற பிரச்சனை இருந்தால் அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
தவறான லாகின் விபரங்கள்: பல EPFO உறுப்பினர்கள் செய்யும் முதன்மையான தவறு இதுதான். ஒவ்வொரு முறையும் ஈபிஎஃப் இணையதளத்தில் உள்நுழைகையில் பாஸ்வேர்டை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் தவறான பாஸ்வேர்டை வழங்கி விடுவார்கள். அதோடு OTP பெரிஃபிகேஷன் நடந்தால் தான் பின்னர் சேவைகளைப் பெற முடியும். ஆனால் நேரம் தவறி மீண்டும் மீண்டும் OTP-ஐ என்டர் செய்தால், பாதுகாப்பு நலன் கருதி ஈபிஎஃப்ஓ இணையதளம் உங்களுடைய லாகினை லாக் செய்துவிடும். இதற்கு பயப்படத் தேவையில்லை. அப்படியே விட்டு விட்டால் ஒரு சில மணி நேரங்களில் தானாகவே சரியாகிவிடும். பாஸ்வேர்டை தவறாக வழங்கினால் மீண்டும் ரீசெட் செய்து புது பாஸ்வேர்டை வழங்க வேண்டும்.

ஆதார் பிழை: சில ஆண்டுகளாக EPFO அமைப்பு, ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்புகளை மிக கூர்மையாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உங்கள் ஆதார் விவரங்களில் ஏதேனும் மிஸ்மேட்ச் இருந்தால் அதுவும் பிரச்சனையாகும். உதாரணமாக ஈபிஎஃப்ஓ இணையதளத்திலும், ஆதார் கார்டிலும் ஒரே பெயர் மற்றும் இனிஷியல் இருக்க வேண்டும். கூடுதலாக பிறந்த தேதி, மொபைல் நம்பர் ஆகியவற்றையும் சரியாக இருக்கிறதா? என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆதார் கார்டில் ஒரு பிறந்த தேதியும் EPF இணையதளத்தில் ஒரு பிறந்த தேதியும் இருந்தால் அதுவும் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். உங்களுடைய அடையாள ஆவணங்களில் சிறுபிழை இருந்தாலும் ஆதார் வெரிஃபிகேஷன் தோல்வியடைந்து EPFO இணையதளம் உங்கள் லாகினை லாக் செய்துவிடும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஏற்கனவே இதே ஆதார் கார்டு விவரங்களை வைத்து தான் லாகின் செய்தேன். ஆனால் இப்பொழுது முடியவில்லை என்று.. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் EPFO இணையதளம் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. அதற்கு ஆதார் கார்டு தான் அடிப்படையாக இருக்கிறது. எனவே ஆதார் விபரங்களில் சிறு பிழை இருந்தாலும், உங்கள் அக்கவுண்ட் லாக் செய்யப்படும்.
நிறுவனத்தின் அப்ரூவல்: EPFO உறுப்பினர்களுக்கு இந்த விஷயம் முன்பே தெரிந்திருக்கும். நாம் ஆன்லைனில் பான் கார்டு, ஆதார் கார்டு விபரங்களை பதிவேற்றம் செய்யும்போது அதை நிறுவனங்களின் சார்பில் அப்ரூவ் செய்ய வேண்டும். ஒருவேளை இந்த செயல்முறை நடக்காமல் இருந்தால் அதுவரையில் உங்களுடைய அக்கவுண்ட்டை சரியாக பயன்படுத்த முடியாது. உதாரணமாக PF பணத்தை எடுக்க முடியாது. PF கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு கண்டிப்பாக நிறுவனங்களின் அப்ரூவல் முக்கியம்.
கம்பெனி மாற்றம்: ஒரு பிஎஃப் உறுப்பினர் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பிஎஃப் கணக்குகளை இணைக்க வேண்டும். ஏற்கனவே இருந்த நிறுவனத்தில் எந்த மொபைல் நம்பர் கொடுக்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டு அந்த நம்பரையே புது நிறுவனத்திலும் வழங்க வேண்டும். சிலர் இரண்டு நம்பர் வைத்திருக்கும் பட்சத்தில் ஒரு நிறுவனத்தில் வேறு நம்பரும் மற்றொரு நிறுவனத்தில் வேறு நம்பரையும் வழங்கி விடுவார்கள். இது போன்ற நேரத்திலும் லாகின் பிரச்சனை ஏற்படும்.
எனவே உங்கள் அக்கவுண்ட் லாக் செய்யப்பட்டு விட்டால் மீண்டும் மீண்டும் தவறான பாஸ்வேர்டை வழங்காமல் "Forgot Password" என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி புதுப்பித்துக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் கேஒய்சி விபரங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதையும் உங்கள் HR-ஐ தொடர்பு கொண்டு அப்டேட் செய்ய சொல்லுங்கள். உங்களால் ஆன்லைனில் இது போன்ற விஷயங்களை செய்ய முடியவில்லை என்றால் இபிஎப்ஓ இணையதளத்தின் குறைதீர்க்கும் இணையதளம் மூலமாக புகார் அளித்து செய்து கொள்ளலாம்.
EPFO இணையதளம் டிஜிட்டல் மையமாக்கப்படுவதால் நம்முடைய பணத்திற்கு பாதுகாப்பு அதிகரித்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால் வயதான இபிஎப் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொண்டால் சிரமம் இல்லாமல் சேவைகளை பெறலாம். எனவே EPF இணையதளங்களுக்குள் நுழைந்தால் உங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, மொபைல் அக்கவுண்ட் போன்றவற்றில் உங்களுடைய விபரங்கள் சரியாக இருக்கிறதா? அதே விவரங்கள் தான் பிஎஃப் இணையதளத்திலும் இருக்கிறதா? என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் உங்கள் அப்பாவின் பெயர் சேர்த்து இருந்து, அதுவே இணையதளத்தில் உங்களுடைய பெயர் மட்டும் இருந்தாலும் பிரச்சனை ஏற்படும். எனவே இது போன்ற சிறு சிறு விஷயங்களையும் கருத்தில் கொள்வது பிற்கால சிக்கல்களை தவிர்க்க உதவும்.


Click it and Unblock the Notifications