ஏப்ரல் 1ம் தேதி புதிய நிதியாண்டு துவங்கிய நிலையில், பல புதிய மாற்றங்களும், விதிகளும், கட்டுப்பாடுகளும் அமலுக்கு வருகிறது. சில மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
அப்படி ஒன்று தான் EPFO கணக்குகளில் வருகிறது, இதேபோல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்த, வரி விதிமுறைகள், வருமான வரி மாற்றங்களும் இன்று அமலுக்கு வருகிறது.

புதிய நிதியாண்டில், NPS, EPFO, மியூச்சவல் பண்ட், வருமான வரிகள், FASTagகள் மற்றும் பிற நிதி விஷயங்களுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வது, அதிகமாகச் சேமிக்கவும் விதி மீறல்களால் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கவும் உதவும். இதில் முக்கியமான EPFO கணக்குகளில் ஏற்படும் மாற்றம் பெரிய அளவு மக்களுக்கு உதவுகிறது.
புதிய EPFO விதி: புதிய வேலை மாற்றுவது மூலம் உங்கள் நிதி நிலை மேம்படுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் வேலையை மாற்றும் போது ஊழியர், வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மாற்றுவது முக்கியமான மற்றும் கடுமையான பணியாக இருக்கும்.
இதை எளிதாக்கும் முயற்சியில் புதிய வேலைக்குச் சேர்ந்த உடன் உங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை தானாகவே பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான ஒரு அமைப்பைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம், நீங்கள் புதிய வேலையில் சேரும்போது எவ்விதமான கோரிக்கையும் இல்லாமலேயே உங்கள் இருப்புத் தொகை தானாக மாற்றப்படும்.
உங்கள் பிஎஃப் இருப்புத் தொகையை ஈபிஎஃப்ஓ தானாகவே உங்கள் புதிய நிறுவனத்தின் கணக்குகளில் வரவு வைக்கும். இதன் மூலம் ஓய்வுக்கால சேமிப்பு தொடர்ந்து தொடரும். இது அடிக்கடி நிறுவனத்தை மாற்றுவோருக்குப் பெரிய நன்மை தரும், மேலும் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரியும்போது உங்கள் பிஎஃப் நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.
NPS முக்கிய மாற்றம்: தேசிய ஓய்வூதிய திட்ட (NPS) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி, ஏப்ரல் 1, 2024 முதல், தேசிய ஓய்வூதிய திட்ட ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) NPS கணக்குகளுக்கான பாதுகாப்பை மேம்படுத்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுவரை கடவுச்சொல் அதாவது பாஸ்வோர்டு அடிப்படையிலான உள்நுழைவு மட்டுமே CRA அமைப்புகள் நுழையும் போது இருந்த நிலையில், இப்போது புதிய அமைப்பில் ஆதார் அங்கீகாரத்துடன் இணைந்த இரு காரணி அங்கீகாரம் அதாவது Two-Factor Authentication கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது, NPS கணக்குதாரர்கள் தங்களின் கணக்குகளை அணுக, கணக்கு எண் மற்றும் கடவுச்சொல் தேவை. ஆனால், ஏப்ரல் 1 முதல், கணக்குதாரர் தனது கணக்கில் லாகின் செய்யும் போது, கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்த பிறகு, ஆதார் அங்கீகாரத்திற்கான தகவலை அளிக்க வேண்டும். பிறகு உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
இந்த புதிய இரு-காரணி அங்கீகார முறை, NPS கணக்குகளை மோசடி மற்றும் திருட்டு முயற்சிகளில் இருந்து மேலும் பாதுகாக்கும். ஆதார் அங்கீகாரம் காரணமாக, கணக்கு உரிமையாளர் தவிர வேறு யாரும் கணக்கை அணுக முடியாது என்பது உறுதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications