ஒவ்வொரு ஊழியருக்கும் இருக்கும் மிகப்பெரிய நிம்மதி என்ன தெரியுமா? தங்களுடைய பணியில் அவர்கள் செய்யும் சேமிப்பு. இந்த சேமிப்பு பிற்காலத்தில் அவர்களுக்கே PF பணமாகக் கிடைக்கும். இந்த பணத்தை அவசர காலங்களிலும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மொத்தமாக சேர்த்து வைத்து ஓய்வுக் காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு உங்களுடைய PF கணக்கை சரியாக நிர்வகிக்க வேண்டும்
உங்கள் PF கணக்கில் பெயர், பிறந்த தேதி, உங்கள் தகப்பனார் பெயர் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் நாளை ஏற்படப்போகும் அவசரத் தேவைக்கு, உங்களால் PF பணத்தை எடுக்க முடியாமல் போகலாம். அவசர காலம் என்பது சொல்லிவிட்டு வருவது அல்ல. எதிர்பாராத நேரத்தில் இவை அச்சுறுத்தும் விதமாக வந்து விடும். அந்தச் சூழலில் உங்கள் PF விவரங்களில் மாற்றங்களை செய்து கொண்டிருக்க முடியாது.
இதற்கு முன்னர் பிறந்த தேதி மற்றும் பெயரில் மாற்றம் செய்வது PF உறுப்பினர்களுக்கு சற்று சிரமமாய் இருந்து வந்தது. ஆனால் இனிமேல் இதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் உங்கள் PF ப்ரொபைலில் இருக்கும் தவறான தகவல்களை ஆன்லைன் மூலமாக எளிதில் திருத்திக் கொள்ளலாம்.

என்னென்ன விவரங்களை மாற்றலாம்?: முன்பெல்லாம் நீங்கள் உங்கள் விவரங்களை அப்டேட் செய்ய PF அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும், அங்கு அவர்கள் கொடுக்கும் ஃபார்மை பூர்த்தி செய்து விண்ணப்பித்தால், அங்குள்ள ஊழியர்கள் திருத்தங்களை மேற்கொள்வார்கள். ஆனால் இப்போது "EPFO With You" என்ற திட்டத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. எங்கும் டிஜிட்டல் எதிலும் டிஜிட்டல் என்று இந்தியா பயணிக்கத் தொடங்கிவிட்டது.
இதற்கு அடித்தளமாக அந்தந்த அரசு நிறுவனங்களும் தங்களை மேம்படுத்தி வருகின்றன. அப்படித்தான் EPFO அமைப்பும் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்தும் விதமாக டிஜிட்டல் கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. திருத்தங்களைச் செய்ய EPFO உறுப்பினர்கள் "Unified Member Portal" என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் விவரங்களில் சிலவற்றை ஆன்லைனிலேயே திருத்திக் கொள்ளலாம்.
உங்களுடைய பெயர் மற்றும் பாலினம், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், கணவன் பெயர், மனைவி பெயர், உங்கள் மெரைட்டல் ஸ்டேட்டஸ், உங்களுடைய நேஷனலிட்டி, நீங்கள் வேலைக்கு சேர்ந்த தேதி, வேலையை விட்டு நின்ற தேதி என பல விஷயங்களை நீங்களே ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியும்.
இதனால் உறுப்பினர்களுக்கு என்ன லாபம்?: திடீர் பண தேவை என்பது எதிர்பாராத நேரங்களில் தான் வரும். அப்படி ஏற்படும் மருத்துவ செலவுகள், குழந்தைகளின் கல்வி போன்ற செலவுகளுக்கு PF அட்வான்ஸ் மற்றும் பிஎஃப் கிளைம் போன்றவற்றைப் பெற இந்த வசதி கண்டிப்பாக உதவியாக இருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் ப்ரொபைல் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவில்லை என்றால் நீங்கள் கிளைம் கோரிக்கை சமர்ப்பித்தாலும் ரிஜக்ட் செய்யப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் விவரங்கள் தெளிவாக இருந்தால்தான் "எம்பிளாயி பென்ஷன் ஸ்கீம் 95" என்ற திட்டத்தின் கீழ் பென்ஷன் தொகையை எந்தத் தங்குதடையும் இன்றி பெற முடியும்.
இதற்கு மட்டுமல்ல ஒவ்வொரு நிறுவனமும் பிஎஃப் கணக்கு திறக்கும் போது ஒரு நாமினியை நியமிக்க சொல்லும். அதை செய்வதற்கும் உங்களுடைய விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். சிலர் ஆதார் கார்டில் ஒரு பெயரையும், பான் கார்டில் ஒரு பெயரையும் வைத்திருப்பார்கள். ஒரு சிலர் ஆதார் கார்டில் தகப்பனாரின் பெயரை சேர்த்துக் கொண்டு வங்கி கணக்கில் தங்கள் பெயரை மட்டும் வைத்திருப்பார்கள். இது போன்ற சூழலில் ஒன்று ஆதார் கார்டில் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது PF கணக்கில் உங்கள் தகப்பனாரின் பெயரைச் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் தான் கிளைம் கோரிக்கை சமர்ப்பிக்கும் போது இடையூறுகள் ஏற்படாமல் இருக்கும்.
சரி எப்படி ப்ரோபைலில் மாற்றம் செய்வது என்று தானே யோசிக்கிறீர்கள். இதற்கும் இபிஎப் அமைப்பு ஒரு பிரத்தியேக வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவை பார்ப்பதற்கு இணையதளத்தில் இருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். இதன் மூலம் நேரடியாக உங்களை அந்த க்யூஆர் கோடு youtube பக்கத்திற்கு கொண்டு செல்லும். ஆன்லைனில் விவரங்களை மாற்றும் போது உங்களுடைய யுஏஎன் நம்பர், பாஸ்வோர்ட் மற்றும் OTP ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம். இபிஎஃப் அதிகாரிகள் உங்களிடம் இது போன்ற விவரங்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.


Click it and Unblock the Notifications