ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி திட்டத்தை வழங்கி வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பங்களிப்பு செய்ய வேண்டும். அப்படி பங்களிக்கும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும். இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அரசால் நிர்ணயிக்கப்படும். எனவே இந்த ஆண்டு 8 சதவீதத்திற்கு அதிகமாக.. அதாவது 8.25% வரை வட்டி விகிதம் வழங்கப்படும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விகிதம், 2025-ஆம் ஆண்டின் பிப்ரவரி 28-ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் EPFO அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தின் போது வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. EPFO அமைப்பின் கீழ் அதிக முதலீடுகள் சேர்ந்த காரணத்தினாலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தினாலும் இந்த நிதியாண்டு நல்ல ஒரு நிதியாண்டாக அமைந்தது. ஆனால் உறுப்பினர்களால் அதிக உரிமை கோரல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் நிதி வெளியேற்றமும் ஏற்பட்டது.

EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டில் 5 கோடிக்கும் அதிகமான PF கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனையின் மதிப்பு 2.5 லட்சம் கோடி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 முதல் 2024-ஆம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்பட்ட 1.82 லட்சம் கோடி மதிப்புடைய 4.45 கோடி கோரிக்கைகளுடன் ஒப்பிடும்போது இந்த நிதி ஆண்டில் சற்று அதிகமான நிதி வெளியேற்றம் காணப்பட்டது. அதாவது பிஎஃப் பணத்தை எடுத்த நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
EPFO அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரங்காவலர் குழுவிடம் (சிபிடி) pf தொகை வட்டி விகிதத்தை முன்மொழியும். அதன் பிறகு அறங்காவலர் குழுவின் ஒப்புதல் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட விகிதத்திற்கு மேல் இருந்தால் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் தேவை. இந்த விகிதம் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு இபிஎப் உறுப்பினர்களின் கணக்குகளில் அவை வரவு வைக்கப்படும்.
வழக்கமாக ஒரு ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் இந்த செயல்முறை நடத்தப்படும். கடந்த ஆண்டு மொத்த அசல் தொகையாக சுமார் 13 லட்சம் கோடிக்கு 8.25% வட்டி வழங்கப்பட்டது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும். சிபிடி EPFO அமைப்பின் சட்டதிட்டங்களை நிர்வகிக்கும் ஒரு குழுவாகும். இதில் அரசாங்க பிரதிநிதிகள் குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், நிறுவனர்கள் ஆகியோர் இருப்பர். இந்த ஆண்டும் இதே போல அதிகபட்ச வட்டி விகிதம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு EPFO உறுப்பினர்களிடையே நிலவி வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications