அதிக பென்ஷன் பெறுவதற்கு ஊழியர்களின் சம்பள விவரத்தை தொழில் நிறுவனங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 2024 மே 31 ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு EPFO அமைப்பு நீட்டித்துள்ளது.
கூடுதலாக பங்கீடு அளித்து அதிக பென்ஷன் அளிப்பதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை தொழிலாளர்கள் சமர்ப்பிக்க EPFO அமைப்பு முன்னதாக அவகாசம் அளித்திருந்தது. சம்பள விவரங்களை அப்லோடு செய்வதற்கான காலக்கெடு 2023 டிசம்பர் 31 ஆம் தேதி வரை தரப்பட்டிருந்தது.

2022 நவம்பர் 4 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அதிக பென்ஷன் வசதி தகுதிபடைத்த ஓய்வூதியர்கள் மற்றும் பிராவிடண்ட் பண்டு உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான வசதி 2023 பிப்ரவரி 26 ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்டது, விண்ணப்பிக்க மே 3 ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது, இந்த அவகாசம் பின்னர் ஜூன் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதன் மூலம் தகுதியான ஓய்வூதியர்கள் மற்றும் பிஎப் உறுப்பினர்களுக்குக் கூடுதலாக நான்கு மாத அவகாசம் கிடைத்தது.
இந்த நிலையில் இந்தக் கெடு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
2023 ஜூலை 11 ஆம் தேதி வரை 17.49 லட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனிடையே தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து சம்பள விவரங்களை சமர்ப்பிப்பதற்கு, இந்தக் காலக் கெடுவை நீட்டிக்குமாறு ஏராளமான கோரிக்கைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மேலும் மூன்று மாதங்களுக்கு இந்த ஆன்லைன் வசதி நீட்டிக்கப்பட்டு 2023 செப்டம்பர் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று பிஎப் நிறுவனம் அறிவித்தது.
ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கோரிக்கையைத் தொடர்ந்து காலக்கெடு 2023 டிசம்பர் 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது.
ஆனால் தொழிலாளர்கள் தனிப்பட்டு அல்லது குடும்ப உறுப்பினருடன் சேர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கான சுமார் 3.6 லட்சம் விண்ணப்பங்கள் இன்னும் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் பரிசீலனையில் இருந்து வருவதாக பிஎப் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பத்தை நிறுவனங்கள் சமர்ப்பிப்பதற்கான காலக் கெடுவை 2024 மே 31 ஆம் தேதி வரை பிஎப் நிறுவனம் நீட்டித்து அறிவித்துள்ளது.
இதனிடையே தொழிலாளர்களின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தொழிலாளர் பிராவிடண்ட் பண்டு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம் தொழிலாளர்களும் ஓய்வூதியர்களும் விரைவில் அதன் பலனைப் பெறுவர் என்றும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications