ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வயதான காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் பணிபுரியும் போதே தங்களுக்கான நிதியை உருவாக்க உதவும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு செயல்படுகிறது. அப்படி EPFO அமைப்பால் வழங்கப்படும் ஒரு திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம். இந்த திட்டத்திற்கு பணிபுரியும் போது ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்கு வட்டி வருமானமும் வழங்கப்படும். வேலையிழப்பு அல்லது வேறு பிரச்சனைகளின் காரணமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் அந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கு முன்னர் PF தொகையை எடுக்கும் செயல்முறை சற்று சிக்கலானதாக இருந்தது. எனவே ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், இந்த ஆண்டு மே முதல் ஜூன் மாதத்திற்குள் EPFO உறுப்பினர்களுக்கு மொபைல் அப்ளிகேஷன் மற்றும் டெபிட் கார்டு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

EPFO அமைப்பின் முழு தகவல் தொழில்நுட்ப அமைப்பையும் மேம்படுத்தி EPFO 2.0 என்ற திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும். ஜனவரி இறுதிக்குள் இவை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மாண்டவியா கூறினார். இதைத்தொடர்ந்து EPF உறுப்பினர்களுக்கு வங்கி வசதிகளை வழங்கும் வகையில் EPFO 3.0 அப்ளிகேஷன் மே முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் உரிமை கோரல் செயல்முறைகள் எளிதாகும் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு தொகையை திரும்பப் பெறலாம்?: என்னதான் ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டாலும் உறுப்பினர்கள் தங்கள் முழு பங்களிப்புத் தொகையையும் திரும்பப் பெற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பணம் திரும்ப பெறுவதற்கான வரம்பு EPFO அமைப்பால் நிர்ணயிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும் இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று, இதற்கு முன்னர் இருந்தது போல் பணம் எடுக்கும் செயல்முறை கடினமானதாக இல்லாமல்.. எளிதில் பணம் எடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
அரசாங்கத்தின் இந்த முயற்சி EPFO உறுப்பினர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்பு படிவத்தை நிரப்பி, அவற்றை அலுவலகங்களில் கொடுத்து, பணம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அது இந்த ஏடிஎம் கார்டு முயற்சியின் மூலம் முற்றிலும் குறையும் வாய்ப்புள்ளது.
வேலை வாய்ப்புகளின் அதிகரிப்பு குறித்து பேசிய மன்சுக் மாண்டவியா, 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் 17.19 கோடி பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார். 2023 முதல் 2024-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 4.6 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத் துறையில் 19% வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications