இந்தியாவை சேர்ந்த ஏழு கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக்கூடிய ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியாவில் இபிஎப்ஓ அமைப்பு மூலமாக பிஎஃப் கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களின் பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்படும். அந்த ஊழியரின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையும் அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனம் சார்பாகவும் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையும் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகைக்கு மத்திய அரசு வட்டி வழங்குகிறது. இந்த வட்டி நேரடியாக பிஎஃப் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது.

நாம் ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான ரொக்க தொகை இதன் மூலம் கிடைக்கும். அந்த வகையில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகச்சிறந்த ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக பிஎஃப் திட்டம் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இபிஎஃப்ஓ அமைப்பு மார்ச் மாத முதல் வாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் அதில் அந்த நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி தொகை எவ்வளவு என்பது நிர்ணயம் செய்யப்படும்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இபிஎப்ஓ ஆலோசனை கூட்டத்தில் 2025 - 26 ஆம் நிதி ஆண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர்ந்து நீடிப்பது என முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டில் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1.25% வரை குறைத்தது. இதனால் வங்கிகளில் டெபாசிட்களுக்கு கிடைக்கக்கூடிய வட்டி அளவு குறைந்தது. இதையே பின்பற்றி இபிஎஃப்ஓ அமைப்பும் பிஎஃப் கணக்குகளுக்கான வட்டி தொகையை குறைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அதிர்ச்சியான முடிவை இபிஎஃப்ஓ எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் 8.25% வட்டி வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. 2022-2023ஆம் ஆண்டில் 8.15% என பிஎஃப் வட்டி இருந்தது. அதுவே 2024-25 ஆம் ஆண்டில் 8.25% என உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே வட்டி நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வட்டி தொகையானது கணக்கிடப்பட்டு அடுத்த மாதத்தில் இருந்து 7 கோடிக்கும் அதிகமான பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தற்போது இபிஎஃப்ஓ அமைப்பு எடுத்து இருக்கக்கூடிய இந்த முடிவு மத்திய நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அரசு இதற்கு ஒப்புதல் தந்தவுடன் பிஎஃப் கணக்குகளில் வட்டித்தொகை வர வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு பிஎஃப் சந்தாதாரர்களுக்கு முக்கியமான ஒரு ஆண்டாக இருக்க போகிறது. ஏனெனில் பிஎஃப் அமைப்பிலேயே பல மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. குறிப்பாக பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ செயலிகள் வாயிலாக எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications