தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) அனைத்து வருங்கால வைப்பு நிதி கணக்குகளிலும் 2019-20 ஆண்டுக்கான, 8.5% வட்டியை இம்மாத இறுதிக்குள் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பிஎஃப் கணக்குகளுக்கு செலுத்த வேண்டிய 8.5% வட்டியை, 8.15% மற்றும் 0.35% என இரண்டு தவணைகளாக பிரித்து செலுத்தலாம் என கடந்த செப்டம்பர் மாதம் தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சில தினங்களில் ஒப்புதல் கிடைக்கலாம்
இந்தாண்டு இறுதிக்குள் 8.5% வட்டியை செலுத்துவதற்கான முன்மொழிதலை நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதற்காக தொழிலாளர் அமைச்சகம் அனுப்பி வைத்தது. இதற்கு இன்னும் சில தினங்களில் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்து விடும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒப்புதல் கிடைத்து விட்டால், அதன் மூலம் 19 கோடி பேர் பயனடைவர்.

எவ்வளவு வட்டி விகிதம்?
இதன் காரணமாக இம்மாத இறுதிக்குள் அனைவருக்கும் 8.5% வட்டி செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் அறங்காவலர் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். அப்போது, 2019-20ஆம் ஆண்டுக்கு 8.5% வட்டி செலுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

நிதி நெருக்கடியில் உள்ள மக்கள்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காலத்தில் ஏராளமானோர், மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு 8.5% வட்டி வழங்குவதற்கு மத்திய அரசிடம் அறங்காவலர் குழு பரிந்துரைத்திருந்தது. அதன்படி, 8.5% வட்டியை இரு தவணைகளாக பிரித்து செலுத்த சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.

இடிஎஃப்ஃபில் நல்ல வருமானம்
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் வைக்கும் தொகை பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இருந்து பயனாளர்களுக்கு தொகை வழங்கப்படும். இடிஎஃப் முதலீட்டில் முதல் நல்ல வருமானம் கிடைத்துள்ளதால் ஒரே தவணையில் பிஎஃப் பயனாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.