இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான ஊழியர்களின் ஓய்வுகால பாதுகாப்பை உறுதி செய்யவே பிஎஃப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதாவது வேலை செய்யும் காலத்திலேயே சிறுக சிறுக பணத்தை சேமித்து ஓய்வு காலத்தில் பெரிய தொகையாக பெற்று கொள்வது தான் இந்த திட்டத்தின் அடிப்படை. இதில் கூடுதலாக அரசு வழங்கும் வட்டியும் கிடைக்கிறது.
பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஒரு நபர் பணி ஓய்வு பெறும் போது மொத்த தொகையாக எடுத்து கொள்ளலாம். ஆனால் இதில் தான் சில மாற்றங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதக தகவல்கள் தெரிவிக்கின்றன. பணி ஓய்வு பெற்ற உடன் ஊழியர்கள் தங்களது சேமிப்பு தொகையை ஒரே மொத்த தொகையாக எடுக்காமல், தவணை முறையில் எடுக்கும் விதமாக Systematic Withdrawal Plan - SWP என்ற புதிய திட்டத்தை ஈபிஎஃப்ஓ பரிசீலித்து வருகிறது.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறும் ஈபிஎஃப்ஓ-வின் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய விதிகளின்படி, ஈபிஎஃப்ஓ உறுப்பினர்கள் 58 வயதில் ஓய்வு பெறும்போது, தங்களது பிஎஃஒ சேமிப்பில் உள்ள 100 சதவீத தொகையையும் ஒரே முறையில் எடுத்துக்கொள்ள முடியும். அதுவும் ஓய்வுக்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்குள் முழு தொகையையும் எடுக்க வேண்டும்; இல்லையெனில் கணக்கு செயல்படாத நிலையை அடைந்து, ஆண்டு வட்டி கிடைப்பது நின்றுவிடும்.
ஆனால் புதிய SWP திட்டம் அமலுக்கு வந்தால், ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்களது சேமிப்பை பிஎஃப் அமைப்பிற்குள்ளேயே தக்க வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கிடைப்பதுடன், ஓய்வுக்குப் பிந்தைய வழக்கமான வருமானத்தையும் பெற முடியும். மீதமுள்ள தொகையின் மீதான உரிமையும் உறுப்பினரிடமே இருக்கும். இதில் மூன்று திட்டங்கள் முன் மொழியப்பட்டுள்ளன.
முழு சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் (Full Systematic Withdrawal): பிஎஃப் பணத்தை ஒரே அடியாக மொத்த தொகையை எடுக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தவணைகளாக பெற்றுக்கொள்ளலாம்.
பகுதி மொத்தத் தொகை + SWP (Partial Lump-sum with SWP): தொடக்கத்தில் ஒரு பகுதியை மொத்த தொகையாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை தவணைகளாக பெறலாம்.
வட்டி மட்டும் எடுக்கும் முறை (Interest-only Withdrawals): அசல் தொகையை அப்படியே முதலீட்டில் வைத்துவிட்டு, சேமிப்புக்கு கிடைக்கும் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
உறுப்பினர்கள் மாதந்தோறும், காலாண்டுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என தங்களுக்கு ஏற்ற இடைவெளியில் பணத்தை பெறலாம். எடுக்கப்பட்ட தொகை போக மீதமுள்ள பிஎஃப் பணத்திற்கு தொடர்ந்து வட்டி கிடைக்கும். உறுப்பினர்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் SWP திட்டத்தை நிறுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை எடுத்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்படும்.
பெரிய மொத்த தொகையை கையாளவோ அல்லது வங்கி வைப்பு நிதி , வருடாந்திர திட்டங்கள் போன்ற பிற முதலீடுகளில் மாற்றவோ விருப்பம் இல்லாத உறுப்பினர்களுக்கு, இந்த திட்டம் ஓய்வூதிய சேமிப்பை எளிதாக நிர்வகிக்க உதவும். ஏற்கனவே மியூச்சுவல் ஃபண்டு சேமிப்பு திட்டங்களில் இந்த SWP வசதி இருக்கிறது. அதுவே பிஎஃப் திட்டத்திலும் கொண்டு வர பரிசீலனை நடக்கிறது.


Click it and Unblock the Notifications

