இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்ய வேலை செய்யக்கூடிய நபர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஒரு நிதி பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் பிஎஃப் கணக்குகள் மேலாண்மை செய்யப்படுகின்றன.
ஒரு ஊழியர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார் எனும் போது அந்த ஊழியரின் சம்பளத்திலும், அந்த ஊழியர் வேலை செய்யக்கூடிய நிறுவனத்தின் சார்பாகவும் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகை பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது. எனவே காம்பவுண்டிங் முறையில் இந்த பணம் வளர்ச்சி பெறும்.

அந்த ஊழியர் பணி ஓய்வு பெறக்கூடிய காலத்தில் மிகப்பெரிய தொகையாக கைகளுக்கு கிடைக்கும். தற்போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு மத்திய அரசு 8.25% வட்டி வழங்குகிறது. ஆனால் கூடிய விரைவில் மத்திய அரசு இந்த வட்டியை குறைக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தன்னுடைய அறங்காவலர் குழு கூட்டத்தை நடத்த இருக்கிறது.
இந்த கூட்டத்தில் பிஎஃப் வட்டி விகிதத்தை குறைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எக்னாமிக் டைம்ஸ் செய்தி குறிப்பிடுகிறது. தற்போது 8.25% வழங்கப்படும் நிலையில் வட்டியை 8 முதல் 8.20 % வரை குறைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விகாஸ் பாரத் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக ஈபிஎப்ஓ அமைப்பில் ஏராளமானவர்கள் இணைகின்றனர்.
நாட்டில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு இந்த அளவு வட்டி வழங்குவதற்கு அரசு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதால் வட்டி குறைக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி கடந்த ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது இதனால் வங்கிகள் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டிகளை குறைத்தன. இதை ஒரு காரணமாக கொண்டும் பிஎஃப் கணக்குக்கான வட்டி குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
முதலில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை அடுத்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வட்டி தொடர்பான முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இது தவிர ஈபிஎஃப்ஓ அமைப்பின் கீழ் இந்த சமூக பாதுகாப்பு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக தற்போதுள்ள சம்பள வரம்பை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது குறித்தும் மார்ச் மாதம் நடைபெறக்கூடிய கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் என சொல்லப்படுகிறது. 2022-2023ஆம் நிதியாண்டில் தான் பிஎஃப் வட்டி விகிதம் 8.15% இல் இருந்து 2023-2024ஆம் நிதியாண்டில் 8.25% என மாற்றப்பட்டது. 2024-2025ஆம் நிதியாண்டிலும் இது மாற்றப்படவில்லை.


Click it and Unblock the Notifications