தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அமைப்புக்கு நுகர்வோர் நீதிமன்றம் மிக முக்கியமான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.
ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் தனது வருங்கால வைப்பு நிதி பணத்தை பெறுவதற்காக சமர்ப்பித்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் 35 நாட்கள் தாமதம் செய்ததற்காக, ஈபிஎஃப்ஓ அமைப்புக்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தாமதமான நாட்களுக்கு 6 சதவீத ஆண்டு வட்டியுடன் தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஃப்ளீட் மேரிடைம் சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர் தனது பிஎஃப் கணக்கில் இருந்த 14,06,272 ரூபாயை பெறுவதற்காக அக்டோபர் 19, 2016 -பிஎஃப் கிளைம் விண்ணப்பத்தை ஈபிஎஃப்ஓவிடம் சமர்ப்பித்திருந்தார். ஈபிஎஃப் திட்டம், 1952-ன் விதிகளின்படி, இதுபோன்ற பிஎஃப் கோரிக்கைகள் பெறப்பட்ட நாளிலிருந்து 20 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு பணம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இவருக்கு டிசம்பர் 14, 2016 அன்றுதான் பணம் வழங்கப்பட்டது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவ தாண்டி தாமதம் ஏற்பட்டதாக கூறி அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு விசாரணையில் ஊழியர் தனது அசல் கோரிக்கை மனுவுடன் தேவையான கூட்டுப் பிரகடனத்தை சமர்ப்பிக்கவில்லை. எனவே அவரது விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டது, அவர் முழுமையான ஆவணங்களை அனுப்பி அது தங்களுக்கு டிசம்பர் 2, 2016 அன்றுதான் கிடைத்தது என ஈபிஎஃப்ஓ அமைப்பு வாதிட்டது.
அந்த ஆவணங்கள் கிடைத்த நாளிலிருந்து 20 நாட்களுக்குள் அதாவது டிசம்பர் 14ஆம் தேதிகுள்ளாகவே பிஎஃப் கிளைம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டது என தெரிவித்தது. ஆனால், ஈபிஎஃப்ஓ-வின் இந்த வாதத்தை மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் முற்றிலுமாக நிராகரித்தது.
அக்டோபர் 19 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தில் முழுமையான ஆவணங்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு எழுத்துப்பூர்வமான நிராகரிப்பு கடிதத்தையோ அல்லது தகவலையோ ஊழியருக்கு அனுப்பியதற்கான சான்றுகளை ஈபிஎஃப்ஓ-வால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை, எனவே ஈபிஎஃப்ஓ தனது கடமையிலிருந்து தவறிவிட்டதுடன், உரிய காலத்தில் கோரிக்கையை பரிசீலிக்க தவறியது சேவையிலுள்ள குறைபாடு என நீதிமன்றம் கண்டித்தது.
மேலும் அந்த நபருக்கு வழங்க வேண்டிய 14,06,272 ரூபாய் பிஎஃப் பணத்திற்கு தாமதமான 35 நாட்களுக்கு 6% ஆண்டு வட்டி கணக்கிட்டு அத்துடன் சேர்த்து பணம் வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நுகர்வோர் ஆணையத்தின் இந்த உத்தரவை அமல்படுத்துவதற்காக ஈபிஎஃப்ஓ-விற்கு 45 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வு காலத்திற்கு பின் கிடைக்கும் பிஎஃப் சேமிப்பு தொகை என்பது ஊழியர்களின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான பொருளாதார ஆதரவு என தெரிவித்த நீதிமன்ற அத்தகைய பணத்தை வழங்குவதில் ஏற்படும் தாமதமானது, தங்களது சேமிப்பை நம்பியிருக்கும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பெரும் பொருளாதார சுமையையும் இன்னல்களையும் ஏற்படுத்தும் என தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த தீர்ப்பு கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சரியான ஆவணங்களை தாக்கல் செய்தும் பிஎஃப் அமைப்பு கிளைம்களை தாமதப்படுத்தினால் அதற்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லலாம் அதன் மூலம் சட்ட நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.


Click it and Unblock the Notifications


