தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அண்மையில் பிஎஃப் சம்பள வரம்பினை 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தியது. இந்த புதிய மாற்றம் செப்டம்பர் 17 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் புதிதாக ஏராளமானவர்கள் பிஎஃப் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
பிஎஃப் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டதால் நம் மாதாந்திர பிஎஃப் பங்களிப்பும் 1800 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் நம் கைக்கு வரும் சம்பளம் குறைந்திருக்கும் இருந்தாலும் அந்த பணம் நம் எதிர்கால தேவைக்காக பிஎஃப் கணக்கில் தான் வரவு வைக்கப்படுகிறது. இதற்கிடையே பிஎஃப் சம்பள வரம்பு உயர்வால் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) யார் தகுதியுடையவர்கள் என்பது குறித்த குழப்பம் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு EPFO அமைப்பு முழுமையான விளக்கத்தை தந்துள்ளது.

பிஎஃப் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டதன் மூலம், மாதந்தோறும் 15,000 முதல் 25,000 ரூபாய் வரை சம்பளம் பெறும் 51 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கட்டாய பிஎஃப் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதன்படி தகுதியுள்ள ஊழியர்கள் இனி மூன்று முக்கிய சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பலன்களைப் பெறுவார்கள்:
1. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF)
2. ஊழியர் ஓய்வூதிய திட்டம் (EPS)
3. ஊழியர்களின் வைப்புத்தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டம் (EDLI)
இதில் EPS எனப்படும் ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் எந்த உறுப்பினர்கள் தகுதி பெறுவார்கள் என்ற விளக்கத்தை பார்க்கலாம். மாத ஊதியம் 25,000 ரூபாய் அல்லது அதற்கு குறைவாக உள்ள ஊழியர்கள், இத்திட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு EPS-ன் கீழ் கொண்டுவரப்படுவார்கள். அதாவது புதிதாக பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்கள் தகுதிக்கு உட்பட்டு ஓய்வூதிய பலன்கள் பெறுவார்கள். உங்களின் அடிப்படை சம்பளம் 25,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் உங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் என்பது கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பிஎஃப் சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்காக மட்டுமே தானாகவே ஒவ்வொரு ஊழியரும் ஓய்வூதிய பலன்களுக்கு தகுதியடைந்துவிட முடியாது. ஊழியரின் முந்தைய உறுப்பினர் நிலை மற்றும் EPS விதிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவித்துள்ளது. தொடர்ந்து 10 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு தான் ஈபிஎஸ் திட்டத்தில் சேர முடியும் என்ற விதி அனைவருக்கும் பொருந்தும்.
தற்போது பிஎஃப் ஊதிய உச்சவரம்பு உயர்ந்திருப்பதால், ஓய்வூதிய பங்களிப்பும் உயரும். பொதுவாக நம் சம்பளத்தில் பிடிக்கப்படும் பணம் பிஎஃப் கணக்கிலும் நிறுவனம் சார்பாக வரவு வைக்கப்படும் பணத்தில் 8.33% பணம் ஓய்வூதியத்திற்கும் செல்லும். அதன்படி அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதிய பங்களிப்பு முன்பு 1,250 ரூபாயிலிருந்து இனி 2,083 ரூபாயாக உயரும். எனவே பணி ஓய்வில் நமக்கு கிடைக்கும் ஓய்வூதிய தொகையும் உயரும்.
எனவே புதிய விதியின் படி பொருந்தக்கூடிய பங்களிப்பு தொகை தங்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படவில்லை என ஊழியர்கள் கருதினால் முதலில் தங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என ஈபிஎஃப்ஓ அறிவுறுத்தியுள்ளது. நிறுவனம் உரிய பதில் தரவில்லை எனில், ஊழியர்கள் பிஎஃப் தளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.


Click it and Unblock the Notifications

