இண்டிகோ, டாடா குழுமம் தாண்டி இந்தியாவில் 3வது பெரிய விமான சேவை நிறுவனமாக இருப்பது ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் தான். இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையை செலுத்தத் தவறியது.
இதன் மூலம் ஏற்கனவே மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என சிஎன்பிசி தெரிவித்துள்ளது. கிங்பிஷர்ஸ் நிறுவனத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது மறக்க முடியாது, இன்று வரையில் தங்களுடைய பிஎப் தொகையை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடைசியாக 2022 ஜனவரியில் 11,581 ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியின் தனது பங்களிப்பை செலுத்தியுள்ளது. அதற்குப் பிறகு எந்த பங்களிப்பும் செலுத்தப்படவில்லை என EPFO அமைப்பு தகவல் அறியும் உரிமை (RTI) மனு மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு EPFO நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், இது குறித்து நிறுவனத்தின் பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் RTI மனு மூலம் பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு இதுவரை 7.6 சதவீதம் சரிந்துள்ளன, ஆனாலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 86 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில், நிதி பற்றாக்குறை மற்றும் பணப்புழக்க பிரச்சினைகள் காரணமாக வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை செலுத்துவதில் தாமதம் செய்துள்ளதாகவும், ஜனவரி மாத ஊதியம் தாமதமாக வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பல்வேறு விமான குத்தகை நிறுவனங்களுடன் சட்டப்போராட்டங்களையும் எதிர்கொண்டு வருகிறது ஸ்பைஸ்ஜெட். சில விமான நிறுவனங்கள், விமானங்களுக்கான குத்தகையை நீட்டிப்பதில் தயக்கம் காட்டி வருவதால் இதன் சேவைகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications