ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு ஓய்வுக்கான நிதியை உருவாக்கும் கருவியாக செயல்பட்டு வருகிறது. ஒரு உறுப்பினர் EPFO அமைப்பின் கீழ் இணைந்து விட்டால்.. அவர் சார்பிலும், அவருடைய நிறுவனத்தின் சார்பிலும் மாதா மாதம் பங்களிப்பு செய்யப்படும். இந்த பங்களிப்புக்கு வட்டியும் கிடைக்கும். எனவே ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பின்னர் இதை தங்கள் ஓய்வுக்காக பயன்படுத்தலாம்.
ஓய்வு பெறுவதற்கு முன்பே பணத்தை எடுப்பதற்கும் EPFO அமைப்பு சில நிபந்தனைகளை வகுத்துள்ளது. அதில் ஒன்றுதான் வேலையின்மை. உறுப்பினர் ஒருவர் வேலை இல்லாமல் இருந்தால் அவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம். ஆனால் அதற்கும் சில விதிகள் உண்டு.

ஒரு ஊழியர் வேலை இல்லாமல் இருந்தால் அவருடைய PF கணக்கிற்கு எந்த வித பங்களிப்பும் செய்யப்பட மாட்டாது. ஆனால் ஏற்கனவே இருக்கும் தொகைக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும். ஒரு ஊழியர் தங்கள் வேலையை விட்டு நின்றாலும் அந்த பிஎஃப் தொகை அவருடைய அக்கவுண்டில் தான் இருக்கும்.
அதன் பிறகு அந்த ஊழியர் தன்னுடைய PF கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றும் வரை கணக்கில் உள்ள தொகைக்கு மட்டும்தான் வட்டி வழங்கப்படும். ஒரு வேலை கணக்கை மீண்டும் புதிய நிறுவனத்திற்கு மாற்றியமைத்து விட்டால், அதன் பிறகு தொடர்ந்து பங்களிப்புகளைச் செய்ய முடியும்.
அதேபோல PF பணத்தை எடுப்பதற்கும் சில நிபந்தனைகள் உண்டு. தொடர்ந்து 2 மாதங்களுக்கு ஒரு ஊழியர் வேலையில்லாமல் இருந்தால் அவர் தங்களுடைய PF பங்களிப்புகளை முழுவதுமாக எடுக்கலாம். அதுவே ஒரு மாதம் வேலை இல்லாமல் இருந்தால் மொத்த பங்களிப்பில் 75% வரை எடுத்துக் கொள்ள முடியும்.
PF தொகையை திரும்பப் பெறுவதற்கான தகுதி: PF பணத்தை திரும்ப பெரும் ஊழியர் ஒரு மாத கால நோட்டீஸ் பீரியடை முடித்திருக்க வேண்டும். அவருடைய விவரங்கள் இபிஎப்ஓ இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். வேறு எந்த வேலையிலும் சேர்ந்திருக்கக் கூடாது. பிஎஃப் பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது வேறு வேலையில் சேர்ந்திருக்கக் கூடாது.
பணத்தை திரும்பப் பெற ஊழியர்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். பணம் எடுப்பதற்கு காம்போசிட் கிளைம் ஃபார்ம் (ஆதார்) அல்லது காம்போசிட் கிளைம் ஃபார்ம் (நான் ஆதார்) போன்ற படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக பணம் திரும்பப் பெற EPFO போர்ட்டலில் இந்த செயல்முறையை தொடங்கலாம்.
திருமணம், வீடு வாங்குதல் அல்லது கல்வி நோக்கங்களுக்காகவும், ஊழியர் குறிப்பிட்ட வருடங்கள் பணியாற்றியிருந்தால், PF-லிருந்து ஒரு பகுதியை திரும்பப் பெற அனுமதி உண்டு.
பல ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தின் முக்கிய சேமிப்பாக PF உள்ளது. எனவே பகுதியளவு பணத்தை திரும்பப் பெற்றால் எதிர்காலத்தில் உங்களுக்கு குறைவான சேமிப்பு கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பலமுறை PF பணத்தை திரும்ப பெற அனுமதி இருந்தாலும் இவை உங்கள் ஓய்வு கால சேமிப்பை பாதிக்கலாம். எனவே தேவை இருந்தால் மட்டும் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications