இந்தியாவில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கான ஓய்வு கால நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இபிஎப்ஓ (EPFO) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நம்முடைய பிஎஃப் கணக்குகளை பராமரிப்பது , மேலாண்மை செய்வது , பணி ஓய்வின்போது நமக்கான pf செட்டில்மென்ட்டை வழங்குவது மற்றும் ஓய்வூதியத் தொகை கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் ஒரு கணிசமான தொகையும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் சார்பாக ஒரு கணிசமான தொகையும் பிஎஃப் கணக்கில் மாதம்தோறும் முதலீடு செய்யப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்யப்படும் பணத்திற்கு அரசாங்கம் ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது. இது கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டு நீங்கள் ஓய்வு பெறும்போது உங்களுக்கு ஒரு பெரிய தொகையாக கைக்கு வந்து சேரும்.

அதுமட்டுமில்லாமல் மாதம் தோறும் ஓய்வூதியமும் கிடைக்கும். இந்த பிஎஃப் கணக்கு மேலாண்மையில் காலமாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் இபிஎப்ஓ அமைப்பு பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறது. உங்களுடைய பிஎஃப் கணக்கிலிருந்து நீங்கள் பணத்தை எடுக்கவோ அல்லது ஆன்லைனில் பாஸ் புக்கை சரி பார்க்கவோ யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (universal account number) எனப்படும் UAN எண் கட்டாயம்.
இந்த UAN எண்ணை நீங்கள் ஆக்டிவேட் செய்தால் மட்டுமே பிஎஃப் சேவைகளை ஆன்லைனில் பெற முடியும், அதே போல நிறுவனம் மாறும் போது உங்களின் பிஎஃப் கணக்கினை எளிதாக மாற்றலாம். இதுநாள் வரை UAN எண்ணை இபிஎப்ஓ இணையதளம் வாயிலாக மட்டுமே ஆக்டிவேட் செய்ய முடியும். அதனை தான் தற்போது மாற்றி இருக்கிறார்கள்.

பிஎஃப் கணக்கு வைத்திருப்போர் இனி UAN எண்ணை இபிஎப்ஓ தளத்தில் ஆக்டிவேட் செய்ய முடியாது. மாறாக Umang செயலியில் மட்டுமே ஆக்டிவேட் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. UAN எண் ஆக்டிவேட் செய்தால் மட்டுமே உங்களால் பிஎஃப் நிதியை நிர்வாகம் செய்ய முடியும். உங்களுடைய pf கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது, நிறுவனம் மாதந்தோறும் உங்கள் பணத்தை முறையாக டெபாசிட் செய்கிறதா, உங்களுக்கு முறையாக வட்டி பணம் கிடைக்கிறதா என்பன உள்ளிட்ட தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அதேபோல நீங்கள் நிறுவனம் மாறும்போது புதிய நிறுவனத்திற்கு பிஎஃப் கணக்கை மாற்ற வேண்டும் என்றாலும் UAN எண் ஆக்டிவேட் செய்யப்பட்டிருப்பது கட்டாயம். இதற்கு முதலில் உங்கள் போனில் umang செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதில் epfo என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கே UAN activation என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இதனை அடுத்து உங்களின் UAN எண், ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
இதனை அடுத்து சப்மிட் கொடுக்கும்போது உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வரக்கூடிய ஓடிபி-ஐ பதிவிட வேண்டும். பின்னர் உங்களின் முக அடையாளம் சரிபார்க்கப்படும். இந்த நடைமுறை முடிந்த உடனே உங்களின் UAN எண் ஆக்டிவேட் ஆகிவிடும். Epfo இணையதளத்தில் இதனை நீங்கள் செய்தால் கூட அங்கே umang செயலியை பயன்படுத்துங்கள் என்ற மெசேஜ் தான் தோன்றுமே தவிர இணையதளத்தில் இதனை மேற்கொள்ள முடியாது என்றே காட்டும்.


Click it and Unblock the Notifications