இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யூபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுத்து பயன்படுத்தும் வசதி குறித்த முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.
நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை அவசர காலத்தில் எடுத்து பயன்படுத்தும் வசதி உள்ளது. ஆனால் இப்போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய பிராசஸ் உள்ளது. இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும், உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும், இதனை அடுத்து பிஎஃப் அதிகாரிகள் நம் கோரிக்கையை பரிசீலனை செய்து ஒப்புதல் அளித்தால் பணம் அக்கவுண்டிற்கு வரும்.

பிஎஃப் பணம் எடுப்பது நீண்ட பிராசஸ் கொண்டதாக உள்ளது. இந்நிலையில் தான் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யூபிஐ மூலம் எடுக்கும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான சோதனையை ஈபிஎஃப்ஓ தொடங்கியுள்ளது என மணி கண்ட்ரோல் பிரத்தியேக செய்தி வெளியிட்டுள்ளது.
ஈபிஎஃப்ஓ அமைப்பு யூபிஐ அடிப்படையிலான பணத்தை எடுக்கும் வசதிக்காக, சில முக்கிய வங்கிகளுடன் இணைந்து சோதனை நடவடிக்கைகளை தற்போது தொடங்கிவிட்டது. இந்த சோதனை முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, இந்த ஆண்டு இறுதிக்குள் அதாவது டிசம்பர் மாதத்திற்குள் இந்த அதிகாரப்பூர்வ சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது நடைமுறைக்கு வந்தால், பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட PF தொகையை யூபிஐ மூலமாக நேரடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மிக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். தற்போதுள்ள நடைமுறைப்படி, பிஎஃப் பணத்தை எடுக்க ஆன்லைன் மூலம் கோரிக்கை வைத்து, அது பரிசீலிக்கப்பட்டு, அதன்பிறகு வங்கி கணக்கிற்குப் பணம் வர சில நாட்கள் ஆகும். ஆனால், இந்த புதிய வசதியில் பணம் எடுக்கும் செயல்முறை மிகவும் எளிமையாக்கப்பட்டு உடனடியாக பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
இந்த யூபிஐ அடிப்படையிலான சேவையானது ஈபிஎஃப்ஓ-வின் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டமான 'EPFO 3.0'இன் ஒரு பகுதியாகும். பிஎஃப் கணக்கில் டிஜிட்டல் செயல்பாடுகளை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கம். நாம் எப்படி வங்கி கணக்குகளை டிஜிட்டல் முறையில் பய்னபடுத்துகிறோமோ அதே போல பிஎஃப் கணக்கையும் டிஜிட்டல் முறையில் பயன்படுத்துவதாக மாற்றுவதே இதன் பிரதான நோக்கமாகும்.
இந்த புதிய வசதி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், கோடிக்கணக்கான ஊழியர்கள் எளிய முறையில் எவ்வித தடையுமின்றி தங்களின் அவசர தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை யூபிஐ மூலமாக பெற்று பயனடையலாம். விரைவில் பிஎஃப் அமைப்பு எவ்வளவு பணத்தை யூபிஐ மூலமாக எடுக்கலாம், பிஎஃப் சந்தாதாரர்கள் இதற்கு என்னென்ன தகவல்களை அப்டேட் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது.


Click it and Unblock the Notifications


