ஈபிஎஃப்ஓ திட்டத்தில் பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு இந்த மாதம் முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. குறிப்பாக பிஎஃப் சம்பள வரம்பு 15,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் 25,000 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் பலருக்கும் அவர்களின் பிஎஃப் பங்களிப்பு விகிதம் இந்த மாதம் முதல் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் வரை 15,000 ரூபாய் என்ற சம்பள வரம்பை கொண்டு தான் அதில் 12% ஊழியர்களும் நிறுவனங்களும் பிஎஃப் பங்களிப்பு செய்து வந்தனர். இதன்படி நம் சம்பளத்தில் மாதம் தோறும் 1800 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதே தொகையை நிறுவனமும் நாம் சார்பாக பங்களிப்பு செய்தது. ஆனால் 25,000 ரூபாய் அடிப்படை சம்பளமாக கொண்ட பலருக்கும் இனி 25,000 ரூபாயில் 12% அதாவது 3000 ரூபாய் பிஎஃப் பங்களிப்பாக எடுத்து கொள்ளப்படும்.

எனவே இனிவரும் மாதங்களில் 1800 இல்லை 3000 ரூபாயை நாம் பிஎஃப் பங்களிப்பாக செய்ய வேண்டும். இப்படி பிஎஃப் பங்களிப்பு அதிகரித்துள்ளதால் , பிஎஃப் உடன் தொடர்புடைய காப்பீட்டுத் திட்டமான EDLI (Employees' Deposit-Linked Insurance) கீழ் கிடைக்கும் காப்பீட்டு தொகையும் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்பு குறைந்தபட்ச கட்டாய ஊதிய உச்சவரம்பு மாதத்திற்கு 15,000 ரூபாயாக இருந்தது. இதன் அடிப்படையில் EDLI திட்டத்தின் கீழ் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையாக 7 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு 25,000 ஆக உயர்த்தியுள்ளதால், EDLI காப்பீட்டுத் தொகைக்கான கணக்கீடும் உயர வேண்டும்.
பழைய சம்பள வரம்பில்: (ரூ.15,000 × 35) + ரூ.1.75 லட்சம் = ரூ.7 லட்சம்.
புதிய சம்பள வரம்பில்: (ரூ.25,000 × 35) +ரூ.1.75 லட்சம் (சராசரி PF இருப்பில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.1.75 லட்சம் வரை) = ரூ. 10.5 லட்சம்
இதற்காக ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டவுடன், காப்பீட்டு தொகை உடனடியாக 10.5 லட்சமாக வழங்கப்படும் என எண்ணக்கூடாது. ஏனெனில் தற்போதைக்கு அதிக பட்ச காப்பீடு தொகை 7 லட்சம் ரூபாய் என்ற வரம்பு உள்ளது. மத்திய அரசு மற்றும் ஈபிஎஃப்ஓ அமைப்பு இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு புதிய கணக்கீட்டின் படி அதிகபட்ச காப்பீட்டு தொகையாக 10,5 லட்சம் ரூபாய் வரும் என அறிவிக்கும் வரை 7 லட்சம் ரூபாய் என்பது தான் தொடரும்.
பிஎஃப் கணக்கு வைத்துள்ள தற்போது நிறுவனத்தில் வேலை செய்து வரும் எந்தவொரு ஊழியரும் தானாகவே இந்த EDLI ஆயுள் காப்பீட்டு திட்டத்திலும் உறுப்பினராகிவிடுவார்கள். இந்த காப்பீட்டு திட்டத்திற்காக ஊழியர்கள் தங்களது ஊதியத்திலிருந்து எந்த பணத்தையும் பிரீமியமாக செலுத்த வேண்டியதில்லை. முழுமையான காப்பீட்டு பிரீமியம் தொகையையும் நிறுவனமே செலுத்துகிறது.
ஒரு ஊழியர் பணிபுரிந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு அதாவது நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுதாரருக்கு இந்த காப்பீட்டு தொகை வழங்கப்படும். விதிகளின்படி, இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு குறைந்தபட்ச காப்பீட்டு தொகையாக 2.5 லட்சம் ரூபாய் கிடைக்கும், அதிகபட்சமாக 7 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும்.
தற்போது பிஎஃப் பங்களிப்பு உயர்த்தப்பட்டுள்ளதால் அரசு காப்பீட்டு தொகையையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கணக்குப்படி இது உயர்ந்தாலும் சட்டப்படி அதிகபட்சம் 7 லட்சம் ரூபாய் என்ற அளவிலேயே இருக்கிறது.


Click it and Unblock the Notifications


